இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) மற்றொரு சீசன் பெரும் ஆரவாரத்துடன் முடிந்த அடுத்த வாரம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் மீது கவனம் திரும்பியுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி இந்த ஆண்டு ஜூன் 7 முதல் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த இறுதிப்போட்டி ஜூன் 7 முதல் ஜூன் 11 வரை நடைபெறும். ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் தற்போது முறையே முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன.


இம்முறை வெல்லுமா?


முதல் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து எளிதாக கோப்பையை தட்டி சென்றது. அதன் பின் இந்தியாவுக்கு தற்போது மீண்டும் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த முறை செய்த தவறை இம்முறை இந்தியா செய்யாது என்று பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில், கடந்த முறை விட்டதை இம்முறை பிடிக்க இந்திய அணியும் உறுதியுடன் உள்ளது.



ஆதிக்கம் செலுத்தும் இந்தியா


சமீப ஆண்டுகளில் இரு அணிகளுக்கிடையே ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருந்த இந்தியா, கடைசியாக நடந்துள்ள நான்கு டெஸ்ட் தொடர்களையும் வென்றுள்ளது. கடந்த முறை இரு அணிகளும் சந்தித்தபோது, போட்டிகள் ஸ்பின்னர்களின் ஆதிக்கமாக இருந்தது. அதில் இந்தியா 2-1 என வென்றது, என்றாலும் ஆஸ்திரேலிய அணியில் இருந்து இரண்டு அறிமுக ஸ்பின்னர்கள் இந்தியாவை குலைய வைத்தனர். அவர்களில் ஒருவர்தான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பார்டர்-கவாஸ்கர் டிராபியில் அறிமுகமான டோட் மர்பி. மர்பி நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி 25.21 சராசரியில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


தொடர்புடைய செய்திகள்: IPL Final 2023: ஸ்பாஞ்ச், ஹேர் ட்ரையர்.. என்னயா பண்ணிகிட்டு இருக்கீங்க..? இணையத்தில் தாக்கப்படும் பி.சி.சி.ஐ...!


கேரம் பந்து வீச பயிற்சி


மர்பி சுழலில் இந்திய பேட்டர்களை திணற செய்தார். அவர் தற்போது அஷ்வினின் 'கேரம் பந்தை' கற்றுக்கொண்டு வீச ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கிறார். "நான் இன்னும் அதை பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன், ஆனால் ரவி அஷ்வின் செய்யும் அளவிற்கு கச்சிதமாக இன்னும் நான் தயாராகவில்லை, அதற்கு இன்னும் பல மைல் தூரம் செல்ல வேண்டும்," என்று மர்ஃபி கூறினார். "இது ஒரு விதத்தில் எளிமையானது, ஆனாலும் மிகவும் கடினம். உங்களால் அதைச் செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதுதான் அவசியம். ஒரு நாள் அதை செய்ய விரும்புகிறேன். நமது பந்து வீச்சில் பல விதங்கள் இருந்தால், அது பேட்ஸ்மேன்களுக்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்துகிறது," என்றார்.



அஷ்வின் ஒரு ஆச்சரியம்


"நன்றாக ஆட எல்லோருமே முயல்கின்றனர், ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை, அடிப்படைகள் சிறப்பாக இருப்பதையும், நாம் வீசும் ஓவர்கள் நம்மால் முடிந்தவரை நல்ல நிலையில் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார். மர்பி கேரம்-பால் கலையை எடுக்க வீடியோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார் மற்றும் அஷ்வினின் பந்து வெளியீட்டு புள்ளியை கூர்ந்து கவனித்து வருகிறார். "இதுவே பகுப்பாய்வின் சிறந்த பகுதியாகும், அப்போதுதான் நாம் அந்த பந்தை கச்சிதமாக வீசலாம்," என்று மர்பி கூறினார். "ஒவ்வொரு பந்தும் எவ்வாறு வெளியேறுகிறது மற்றும் அது எப்படி திரும்புகிறது என்பதைப் பார்க்க, வீடியோக்களைப் பார்க்க வேண்டும், அவரது கை மற்றும் மணிக்கட்டு நிலையை கூர்ந்து கவனிக்கவும் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். இந்த விஷயத்தில் அவரது திறமைகள் மற்ற எல்லோரையும் விட சிறப்பாக உள்ளன, மேலும் அவரது ஓவர்கள் முழுவதும், அவர் செயல்படுத்தக்கூடிய நுட்பமான மாறுபாடுகளைப் பார்ப்பது ஆச்சரியமாக இருந்தது," என்றார்.