இந்தியாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் நடைபெறுவது போலவே பாகிஸ்தானில் பி.எஸ்.எல். எனப்படும் பாகிஸ்தான் பிரிமீயர் லீக் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் பி.எஸ்.எல். லீக் போட்டி நடைபெற்றது.


இந்த போட்டியில் பாகிஸ்தான் கேப்டனாகிய பாபர் அசாம் தலைமையில் பெஷாவர் ஜல்மி அணியும், ஷதாப்கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணியும் மோதின. இதில் முதலில் பெஷாவர் ஜல்மி அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கேப்டன் பாபர் அசாமும், விக்கெட் கீப்பர் முகமது ஹாரிசும் களமிறங்கினர்.


ஹசன் அலியை அடிக்கச் சென்ற பாபர்:


போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இஸ்லாமாபாத் அணியின் பந்துவீச்சாளர் ஹசன்அலி பாபர் அசாமிற்கு பந்து வீசினார். அவரது பந்துவீச்சை அடித்துவிட்டு பாபர் அசாம் 2 ரன்களுக்கு ஓடினார். அவர் ஓடும்போது ஹசன் அலி, வீரர்கள் ரன் எடுக்க ஓடும் பாதையில் பந்துவீசிவிட்டு வந்த வேகத்தில் அமர்ந்திருந்தார்.






அப்போது, எதிரே ரன் எடுக்க வந்த பாபர் அசாம் ஹசன் அலியை செல்லமாக அடிப்பது போல பேட்டால் சைகை செய்தார். அதைக்கண்ட ஹசன் அலி சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்து ஓடிவிடுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பாபர் அசாம் தலைமையில் களமிறங்கும் பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளர் ஹசன் அலி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், பி.எஸ்.எல். லீக் போட்டிகளில் இதுபோன்ற குறும்புத்தனங்களை பார்க்க முடிகிறது. ஆனாலும், அதன்பின்பு பாபர் அசாம் கோபத்தில் பேட்டை மைதானத்தில் வீசியெறிந்தார். 






இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெஷாவர் ஜல்மி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை எடுத்தது. கேப்டன் பாபர் அசாம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 58 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 75 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இஸ்லாமபாத் அணிக்கு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த குர்பாஸ் அதிரடி தொடக்கம் அளித்தார்.


பாபர் அசாம் அணி தோல்வி:


அவர் 31 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 62 ரன்கள் விளாசினார். அவருக்கு பக்கபலமாக வான்டர்டுசென் 29 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 42 ரன்கள் விளாசினார். கடைசியில் ஆசிப் அலி 13 பந்துகளில் 29 ரன்கள் எடுக்க 14.5 ஓவர்களிலே இஸ்லாமபாத் அணி 159 ரன்கள் எடுத்தது.


இஸ்லாமபாத் அணிக்காக பந்துவீசிய ஹசன் அலி 4 ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரயீஸ், அஷ்ரப், ஷதாப்கான், முபசீர்கான் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பெஷாவர் அணியின் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினர். குறிப்பாக, உஸ்மான் காதிர் 4 ஓவர்களில் 50 ரன்களை வாரி வழங்கினார்.


மேலும் படிக்க: Watch Video: கண்ணீர் விட்டு அழுத ஹர்மன் பிரீத்கவுர்..! கட்டியணைத்து ஆறுதல் கூறிய முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா..!


மேலும் படிக்க: Harmanpreet Kaur Run-Out: அதே மாதிரியான அவுட்.. எதிரணியுடன் இணைந்து சதிசெய்யும் ரன் அவுட்.. தோனி, கவுர் கலங்கிய மொமெண்ட்!