மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. 


முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. 


173 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா 9 ரன்களிலும், ஸ்மிருதி மந்தனா 2 ரன்களுக்கும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர். யஷ்திகா பாட்டியா 4 ரன்கள் எடுத்து இருந்தபோது, எதிர்பாராத விதமாக ரன் - அவுட் முறையில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி ஒரு கட்டத்தில் 28 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்தது. 


4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெமிமா மற்றும் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். விக்கெட் இழக்காமல் சீரான இடைவெளியில் இருவரும் பவுண்டரிகளை விளாசி, இந்த ஜோடி 69 ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ரோட்ரிக்ஸ் 24 பந்துகளில் 43 ரன்களை சேர்த்து அவுட்டானார். மறுமுனையில் அபாரமாக விளையாடிய ஹர்மன் பிரீத் கவுர் 52 ரன்களை சேர்த்தபோது, ரன் - அவுட் முறையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.


ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டிக்கு தொடங்குவதற்கு முன்புவரை உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஹர்மன்பிரீத் கவுர், இந்திய அணி இக்கட்டான நிலையில் தவித்தபோது, 34 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். தனது இன்னிங்ஸில் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் விளாசினார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவில்லை என்றாலும், ஹர்மன்பிரீத் கவுரை சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் பாராட்டி வருகின்றன. ஹர்மன் பிரீத் இரண்டாவது ரன்னுக்கு ஓடியபோது விக்கெட் கிரீஸை நெருங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக ஹர்மன் பிரீத் பேட்டானது புல்லில் சிக்கிகொண்டது. சரியான நேரத்தில் அலிசா ஹீலி கவுரை ரன் அவுட் செய்ய, அதன் பிறகு இந்திய அணி தோல்வி பக்கம் செல்ல தொடங்கியது. 






தோனி -கவுர் ரன் அவுட்: 


இந்தநிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான 2019 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் இதேபோன்ற சம்பவத்தை ரசிகர்கள் நினைவு கூர்ந்தனர். டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். தொடக்க வீரர்கள் ஆரம்பத்தில் ஏமாற்றம் அளித்தாலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் (95 பந்துகளில் 67 ரன்கள்) மற்றும் ராஸ் டெய்லர் (90 பந்துகளில் 74 ரன்கள்) ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த இறுதியில் நியூசிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. 


இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.


240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிதான். இந்திய அணி, 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றி அசத்தலாக பந்து வீசி தொடக்கதிலேயே 3 விக்கெட்களை கைப்பற்ற, இந்திய அணி 91 ரன்களுக்கே 6 விக்கெட்களை இழந்தது. 


அப்போதுதான் எம்எஸ் தோனியும் ரவீந்திர ஜடேஜாவும் தங்கள் அணியை மீண்டும் ஆட்டத்திற்கு கொண்டு வர பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். தோனி (72 பந்துகளில் 50), ஜடேஜா (59 பந்துகளில் 77) ஆகியோர் 116 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தனர்.


48வது ஓவரில் ஜடேஜாவை வெளியேற்றிய டிரெண்ட் போல்ட் போட்டியின் மிக முக்கியமான திருப்புமுனையாய் அமைய, ஆட்டத்தின் 49வது ஓவரில், ஸ்கொயர் லெக் பகுதிக்கு தள்ளப்பட்டதை இரண்டு ரன்களாக மாற்ற தோனி  முயற்சி செய்தார்.  மார்ட்டின் கப்டிலின் வீசியா த்ரோ நேராக ஸ்டெம்பை பதம் பார்க்க, மில்லி மீட்டர் கணக்கில் தோனி ரன் அவுட்டாகி நடையைக்கட்டினார். 48.3 வது ஓவரில் இந்திய அணி ஸ்கோர் 216,தோனி மட்டும் அன்று ரன் அவுட் ஆகாமல் இருந்து இருந்தால் நிச்சயம் அந்த அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 2019 உலகக் கோப்பையை வென்று இருக்கலாம். 


அதோடு மட்டுமின்றி தோனி விளையாடிய கடைசி (ஜூலை 10) சர்வதேச கிரிக்கெட் போட்டியும் அதுவே. அதற்கு தோனி எந்தவோரு ஒரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடவும் இல்லை. இதையடுத்து, ஹர்மன்பிரீத் மற்றும் தோனியின் ரன் அவுட்களை ஒப்பிட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.