இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் வினோத் காம்ப்ளியின் 30 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் சாதனையை, இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்ஸ் தகர்த்துள்ளார். அதோடு கவாஸ்கரின் சாதனையையும் முறியடித்துள்ளார்.


ஹாரி ப்ரூக்ஸ் புதிய சாதனை:


இங்கிலாந்து அணியை சேர்ந்த இளம் வீரரான ஹாரி ப்ரூக்ஸ், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக, தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 184 ரன்களை எடுத்து விளையாடி வருகிறார். இதன் மூலம், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 9 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு அதிக ரன்களை குவித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.  


வினோத் காம்ப்ளி சாதனை முறியடிப்பு:


நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியதன் மூலம், முதல் ஒன்பது டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 800 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை ஹாரி ப்ரூக்ஸ் படைத்துள்ளார்.  இதற்கு முன் இந்திய வீரர் வினோத் காம்ப்ளி தனது முதல் ஒன்பது டெஸ்ட் இன்னிங்ஸ்களில் இரண்டு இரட்டை சதங்கள் உட்பட நான்கு சதங்கள் உடன் 798 ரன்கள் குவித்து சாதனை படைத்திருந்தார். அந்த 30 வருட கால சாதனை தற்போது ப்ரூக்ஸால் முறியடிக்கப்பட்டுள்ளது.


சராசரியிலும் அசத்தல்:


இந்த பட்டியலில்,  ஒன்பது இன்னிங்ஸ்களுக்குப் பிறகு ஹெர்பர்ட் சட்க்ளிஃப் 780 ரன்களும், சுனில் கவாஸ்கர்  778 ரன்களும், எவர்டன் வீக்ஸ் 777 ரன்களும் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். புரூக் 9 டெஸ்ட் இன்னிங்ஸில் விலையாடி100.88 என்ற சராசரியில் கொண்டுள்ளார். ஒன்பது டெஸ்ட் இன்னிங்ஸ்களுக்குப் பிறகு புரூக்கிற்கு முன்னதாக கவாஸ்கர் மட்டுமே 129.66 என்ற சிறந்த டெஸ்ட் சராசரியைக் கொண்டுள்ளார்.


வெலிங்டனில் புதிய சாதனை:


வெலிங்டன் மைதானத்தில் 184 ரன்களை சேர்த்துள்ள ப்ரூக்ஸ், அந்த மைதானத்தில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களை குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன் 1984ல் டெரெக் ராண்டால் எடுத்த 164 ரன்களே இங்கிலாந்து வீரரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் ஆகும். 


தொடர்ந்து அசத்தும் ப்ரூக்ஸ்:


24 வயதான ப்ரூக்ஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான தொடர் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். கடந்த டிசம்பரில் நடைபெற்ற பகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டுமே 3 சதங்களை விளாசி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அதைதொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக, இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து 4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோ ரூட் மற்றும் ப்ரூக்ஸ், 294 ரன்களை சேர்த்து தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இதனால், இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்களை சேர்த்துள்ளது.