நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். அதன்படி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.


700 விக்கெட்டுகள் எடுத்து சாதனை:


நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், பென் டக்கெட்டின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை எடுத்த முதல் நியூசிலாந்து வீரர் எனும் பெருமையை டிம் சவுதி பெற்றுள்ளார். இதில் 18 முறை அவர் எடுத்த 5-விக்கெட்ஸ் அடங்கும். இதோடு, சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் சவுதி முதலிடத்தில் உள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் தொடரை நியூசிலாந்து அணி வென்றதில், சவுதியின் பங்கு அளப்பரியது. 


அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய நியூசிலாந்து வீரர்கள்:


சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய நியூசிலாந்து வீரர்களின் பட்டியலில் சவுதியை தொடர்ந்து, அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி 696 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து முன்றாவது இடத்தில் ரிச்சர்ட் ஹேட்லீயும், நான்காவது இடத்தில் 578 விக்கெட்களுடன் போல்ட்டும் நீடிக்கின்றனர்.


சர்வதேச போட்டிகளில் சவுதி:


சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய 10வது வேகப்பந்து வீச்சாளர், 15வது பந்துவீச்சாளர் எனும் பெருமையை சவுதி பெற்றுள்ளார். இந்த பட்டியலில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 969 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார். 699 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த, தென்னாப்ரிக்காவின் முன்னாள் வீரர் ஸ்டெயினின் சாதனையை சவுதி முறியடித்துள்ளார்.  உள்நாட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில், 385 விக்கெட்களுடன் சவுதி 9வது இடத்தில் உள்ளார். அதேநேரம், 240 விக்கெட்டுகள் வெளிநாடுகளிலும், 75 விக்கெட்டுகள் நடுநிலையான மைதானங்களில் நடைபெற்ற போட்டிகளிலும் வீழ்த்தியுள்ளார்.


கிரிக்கெட்டில் சவுதி:


34 வயதான டிம் சவுதி கடந்த 2008ம் ஆண்டு அதாவது தனது 19வது வயதில் நியூசிலாந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலும் இங்கிலாந்து அணிக்கு எதிராகவே தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை அவர் தொடங்கினார். இதுவரை அவர் விளையாடிய 92 டெஸ்ட் போட்டிகளில் 356 விக்கெட்களையும், 154 ஒருநாள் போட்டிகளில் 210 விக்கெட்களையும், 106 டி-போட்டிகளில் 134 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இவரது சிறந்த பந்துவீச்சு 108 ரன்களை கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது தான். இதனிடையே, பல்வேறு லீக் போட்டிகளிலும் சவுதி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் 52 போட்டிகளில் விளையாடி 45 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.