இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், நேற்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் பிரம்மாண்ட வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.


ஹர்திக் பாண்ட்யா ஆவேசம்:


டிரினிடாட்டில் நடைபெற்ற போட்டிக்கு பிறகு போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகத்தின் மீது தனது அதிருப்தியை பதிவு செய்தார். பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய ஹர்திக் பாண்ட்யா, “நாங்கள் விளையாடிய சிறந்த மைதானங்களில் இந்த மைதானமும் ஒன்றாகும். அடுத்த முறை வெஸ்ட் இண்டீசுக்கு நாங்கள் வரும்போது பயணம் செய்வது, நிர்வகிப்பது உள்பட பல விஷயங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.


கடந்தாண்டும் இதுபோன்ற சில சிக்கல்கள் இருந்தது. நாங்கள் ஒன்றும் ஆடம்பர வசதிகள் கேட்கவில்லை. நாங்கள் அடிப்படை தேவைகளைத்தான் கேட்கிறோம். இந்த விஷயங்கள் தவிர மற்றபடி, வெஸ்ட் இண்டீசிற்கு வந்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடனே விளையாடினோம்” என்றார்.


சரி செய்யுமா வெஸ்ட் இண்டீஸ்?


இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பிடும்போது பல்வேறு சிக்கல்களுடன் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நிர்வாகம் இந்திய அணியினருக்கான பயண ஏற்பாடுகள், விமான ஏற்பாடுகளை முறையாக செய்யவில்லை என்று ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் மீது தன்னுடைய அதிருப்தியை வெளிப்படையாக பேசியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹர்திக் பாண்ட்யாவின் கருத்தைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் அடுத்த முறை தங்களை மேம்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வீரர்கள் முன்னதாக இரவு விமான பயணத்தை தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், டிரினிடாட்டில் இருந்து பார்படாசுக்கு இரவு மற்றும் அதிகாலையில் விமானங்கள் சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது வீரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.


முன்னதாக, நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி இஷான்கிஷான், சுப்மன்கில், சஞ்சு சாம்சன் மற்றும் ஹர்திக்பாண்ட்யா அதிரடி பேட்டிங்கால் 351 ரன்களை குவித்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை சுருட்டி 200 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடர் மட்டுமின்றி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையயேயான 5 டி20 போட்டிகளை கொண்ட டி20 தொடர் வரும் 3-ஆம் தேதி தொடங்க உள்ளது.


மேலும் படிக்க: IND vs WI: 13வது முறையாக தொடர்.. அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி.. வெஸ்ட் இண்டீஸை ஆட்டிபடைக்கும் இந்தியா!


மேலும் படிக்க: Asian Champions Trophy: 1995 - 2023 வரை பல போட்டிகளை கண்ட மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம்.. நினைவுகள், சிறப்பு அம்சங்கள் ஒரு பார்வை!