இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ஆசியக்கோப்பை அணியில் யுஸ்வேந்திர சாஹல் பெயர் இல்லாதது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.


சாஹலுக்கு இடமில்லை


இந்திய அணி நிர்வாகம் குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேலுக்கு முன்னுரிமை அளித்ததால், அனுபவமிக்க லெக்-ஸ்பின்னரான சாஹலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. 33 வயதான அவர் கடந்த இரண்டு வருடங்களாக அணியில் பெரும் பங்கை அளித்து வருகிறார். அவர் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை அணியில் கூட இடம்பிடித்திருந்தார். இந்த நிலையில், ஒயிட்-பால் கிரிக்கெட்டில் இந்தியாவின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் சாஹல் என்று ஹர்பஜன் கூறுகிறார். சில மோசமான ஆட்டங்கள் அவரை மோசமான பந்துவீச்சாளராக மாற்றாது என்று அவர் விவரித்துள்ளார்.



அணியின் சிறந்த ஸ்பின்னர் அவர்தான்


"யுஸ்வேந்திர சாஹல் இல்லாததுதான் அணியின் ஒரே குறை என்று நான் உணர்கிறேன். உண்மையான சுழற்பந்து வீச்சாளரைப் பற்றி நீங்கள் பேசினால், இந்தியாவில் இதைவிட சிறந்த ஸ்பின்னர் யாரும் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஒயிட்-பால் கிரிக்கெட்டில் அவர்தான் சிறந்தவர். அவரது கடைசி சில ஆட்டங்கள் சிறப்பாக இல்லைதான், ஆனால் அது மட்டும் அவரை ஒரு மோசமான பந்துவீச்சாளர் என்று கூற வைத்துவிடாது," என்று ஹர்பஜன் தனது யூடியூப் சேனலில் கூறினார். மேலும் உலகக் கோப்பைக்கான அணிக்கு சாஹல் திரும்புவார் என்று ஹர்பஜன் நம்புவதாக குறிப்பிட்டார். குறிப்பாக இந்தியாவில் நடைபெறும் போட்டி என்பதால் அப்படி ஒரு ஸ்பின்னர் இல்லாமல் போவது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் விவரித்தார்.


தொடர்புடைய செய்திகள்: Chandrayaan 3 EXCLUSIVE: சந்திரயான் சரித்திர வெற்றி; என்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கும்?- விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் சிறப்புப் பேட்டி!


ஃபார்ம் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன் 


"அணியில் அவரது இருப்பு அவசியம் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு கதவுகள் மூடப்படவில்லை என்று நான் நம்புகிறேன். போட்டி இந்தியாவில் நடப்பதால் அவரை உலகக் கோப்பைக்கு கருத்தில் கொள்வது முக்கியம். சாஹல் மேட்ச்-வின்னர் என்று பலமுறை நிரூபித்தவர். ஃபார்ம் இல்லை என்பதால் அவருக்கு ஓய்வு கொடுத்திருக்கலாம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அப்போதும் அவர் அணியில் இருந்திருந்தால், அவரது நம்பிக்கை உடையாமல் இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார். 



மோசமாக ஆடிய கடைசி தொடர்


வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 ஐ தொடரில் சாஹல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஐந்து போட்டிகளில் வெறும் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். மேலும் கடைசி மூன்று போட்டிகளில் நிறைய ரன்களை கசியவிட்டார். அதே வேளையில் குல்தீப் யாதவ் ஒருநாள் தொடரில் சிறப்பாக பந்து வீசி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இதனால அவர் பெயருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.


ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்) விராட் கோலி, சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா (துணைக் கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், அக்சர் பட்டேல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா, சஞ்சு சாம்சன் (ரிசர்வ் வீரர்).