கோப்பையை வெல்ல டிராவிட் மற்றும் ரோஹித்திற்கு கங்குலி அறிவுரை கூறியுள்ளார். முடிவைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும், உலகக் கோப்பையில் அச்சமின்றி கிரிக்கெட் விளையாடுங்கள் என்றும் கங்குலி அறிவுறுத்தினார்.
கங்குலி அறிவுரை
2013 முதல் இந்தியா ஐசிசி கோப்பையை வெல்லவில்லை. ஆனால் இந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பையை வெல்லும் அணி தங்களிடம் இருப்பதாக முன்னாள் இந்திய கேப்டனும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி நம்புகிறார். இலங்கை மற்றும் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து, சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணிக்கும் ரோகித் ஷர்மாவுக்கும், பயிற்சியாளர் டராவிட்டுக்கும் அறிவுரை கூறி உள்ளார் கங்குலி. "இந்தியா ஒருபோதும் பலவீனமான அணியாக இருக்க முடியாது. இவ்வளவு திறமைகள் உள்ள நாடு ஒருபோதும் பலவீனமான அணியாக இருக்க முடியாது. பாதி வீரர்களுக்கு வாய்ப்பே இல்லை. ராகுல் டிராவிட், ரோஹித் சர்மா மற்றும் தேர்வாளர்கள் முக்கியமான வீரர்களை தக்கவைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உலகக் கோப்பை வரை இதே அணியை வைத்து நிலையாக செல்லவேண்டும்" என்று கங்குலி ஸ்போர்ட்ஸ் டாக்கிடம் கூறினார்.
பயமில்லாமல் அணுக வேண்டும்
ஐ.சி.சி. போட்டிகளில் கோப்பை வெல்லவில்லை என்ற இந்திய அணி மீதான பொதுவான விமர்சனம் இருக்கும் நிலையில் இந்த முறை இந்தியாவில் நடக்கும் போட்டியில் கோப்பையை வெல்ல டிராவிட் மற்றும் ரோஹித் ஆகியோர் போட்டியின் முடிவைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும், உலகக் கோப்பையில் அச்சமின்றி கிரிக்கெட் விளையாடுங்கள் என்றும் கங்குலி அறிவுறுத்தினார். "அவர்கள் உலகக் கோப்பையை அடையும்போது, அவர்கள் எந்த பயமும் இல்லாமல் விளையாட வேண்டும், அவர்கள் கோப்பையை வென்றாலும் பரவாயில்லை," என்று முன்னாள் பிசிசிஐ தலைவர் கூறினார்.
நல்ல வீரர்கள் கொண்ட அணி
மேலும், "சுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி... ரவீந்திர ஜடேஜா மீண்டும் வருவார்... போன்ற வீரர்களை கொண்ட எந்த அணியும் மோசமாக விளையாடாது" என்று அவர் மேலும் கூறினார். இந்த ஐபிஎல்-ல் இருந்து டெல்லி கேப்பிடல்ஸ் கிரிக்கெட் இயக்குநராக கங்குலி பொறுப்பேற்க உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் கார் விபத்தின் போது பல காயங்களுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வரும் தங்கள் வழக்கமான கேப்டன் ரிஷப் பந்தின் சேவையை டெல்லி அணி இழக்க நேரிடும் என்று கங்குலி கூறினார்.
டெல்லி அணி கேப்டன்சி குறித்து
"இது ஒரு பாத்திரத்தில் இருந்து மற்றொரு பாத்திரம், நான் அதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். 2019 ஆம் ஆண்டில் நான் முதன்முதலில் டெல்லி கேப்பிட்டல்ஸுடன் கைகோர்த்தபோது, அதன்பிறகு அணி நன்றாகச் செயல்பட்டுள்ளது. ரிஷப் பந்தின் வெற்றிடத்தை நாங்கள் உணர்வோம். அவர் ஒரு சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர். ஆனால் அவர் காயமடைந்துள்ளார், அதற்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியாது", என்று கங்குலி கூறினார்.