ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீராங்கனை நீரஜ் சோப்ரா, ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்துக்கு எதிரான U19 T20 மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியைச் சந்தித்ததாக பிசிசிஐ பகிர்ந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரஜ் சோப்ரா சந்திப்பு
அந்த பதிவில், “ஒரு தரமான சந்திப்பு! ஈட்டி எறிதல் வீரர் & ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா 19 வயதிற்குட்பட்ட இந்திய மகளிர் அணியுடன் இறுதிப்போட்டிக்கு முன்னதாக உரையாடினார்! ஈட்டி எறிதல் சூப்பர் ஸ்டார் மனநிலையை எப்படி வைத்துக்கொள்ள வேண்டுமென்று அணியினருடன் பேசினார்", என்று ட்வீட் செய்திருந்தது பிசிசிஐ.
ஞாயிற்றுக்கிழமை, இந்திய கேப்டன் ஷஃபாலி வர்மா, முதல்முறையாக ஐசிசி யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய அணியை அழைத்து சென்றிருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் இந்தியாவை வழிநடத்தும் அவர் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அரங்கில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி எந்த உலகக் கோப்பையையும் வென்றதில்லை எனபது வரலாறு. அதனால் இந்த இறுதி போட்டியில் இந்திய அணி மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுவரை கோப்பை வெல்லாத இந்திய அணி
மூத்த பெண்கள் அணியினர் மூன்று முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்துள்ளனர், ஆனால் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. 2005 இல் ஆஸ்திரேலியாவிடம் 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி, 2017 இல் இங்கிலாந்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. T20I களில் 2020 இறுதிப்போட்டி 85 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியுடன் தோல்வியுற்றனர்.
U-19 அரையிறுதி
U-19 உலகக் கோப்பை அரையிறுதியில், இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சக்திவாய்ந்த நியூசிலாந்து அணியை 107/9 க்கு கட்டுப்படுத்தியதால், இந்தியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வென்று ஆதிக்கம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. லெக்-ஸ்பின்னர் பார்ஷவி சோப்ரா 3/20 என்ற அற்புதமான பந்துவீச்சால் பெரும் பங்காற்றினார். ஷஃபாலி தனது நான்கு ஓவர்களில் வெறும் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் எடுத்தார்.
நீரஜ் சோப்ரா புத்தாண்டு இலக்கு
தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அரைசதம் அடிக்க, போட்டியின் முன்னணி வீரரான ஸ்வேதா செஹ்ராவத், இந்தியாவை வெற்றிக்கு அழைத்து சென்றார். இதற்கிடையில், நீரஜ் சோப்ரா, புத்தாண்டில் தனது ஈட்டியின் மூலம் 90 மீட்டர் கடக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளார். "இந்த புத்தாண்டில், இந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என்று நம்புகிறேன்," என்று நீரஜ் சோப்ரா இந்த மாத தொடக்கத்தில் இங்கிலாந்தில் இருந்து ஒரு வீடியோ உரையாடலில் கூறினார்.
டோக்கியோவில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்திற்குப் பிறகு, 24 வயதான ஒலிம்பிக் சாம்பியன் ஈட்டி எறிதல் வீரர், டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் தனது மகுடத்தில் மற்றொரு வைரக்கல்லைச் சேர்த்துள்ளார். அதற்கு முன்பு, உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.