இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, கடந்த ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இதன் மூலம் தற்போது 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில்தான் 2 வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2-ஆம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இதனிடையே இந்த டெஸ்ட் போட்டியில் முறியடிக்கப்பட உள்ள சாதனைகளை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


இந்தியாவுக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்:


இங்கிலாந்து அணிக்கு எதிராக இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடியிருக்கிறார். இதில், 93 விக்கெட்டுகளை அவர் இந்திய அணிக்காக எடுத்துக்கொடுத்திருக்கிறார். முன்னதாக, இங்கிலாந்து அணிக்கு எதிராக முன்னாள் இந்திய வீரர் பகவத் சந்திரசேகர் 95 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருக்கும் சூழலில், இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்த சாதனையை அஸ்வின் முறியடிப்பார்.


உலகடெஸ்ட்சாம்பியன்ஷிப்பில் 100 விக்கெட்டுகள்:


இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 23 போட்டிகள் விளையாடி 97 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 100 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை பும்ரா எட்டுவதற்கு இன்னும் 3 விக்கெட்டுகள் மட்டுமே இருக்கிறது. அதன்படி, இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 வது போட்டியில் 3 விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தினால் இந்த சாதனையை படைப்பார். முன்னதாக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்தியராக அஸ்வின் இருக்கிறார்.


டெஸ்டில் இந்தியாவுக்காக அதிக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்:


இந்திய அணிக்காக 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் இதுவரை 34 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். முன்னதாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே 35 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினால் இந்த சாதனையை முறியடிப்பார்.


WTC வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக ரன்கள்:


28 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 2215 ரன்களை குவித்துள்ளார். இனிவரும் போட்டிகளில் 21 ரன்களை எடுத்தால் விராட் கோலியின் சாதனையை முறியடிப்பார். முன்னதாக விராட் கோலி 2235 ரன்களை குவித்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவிற்காக அதிக ரன்களை எடுத்து கொடுத்தவராக இருக்கிறார்.


சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக அதிக சதங்கள்:


சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக 48 சதங்கள் அடித்த ராகுல் ட்ராவிட்டின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்ய இன்னும் இரண்டு சதங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. முன்னதாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களும், விராட் கோலி 80 சதங்களும் விளாசி இருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: IND vs NZ U19: U19 உலகக் கோப்பையில் அதகளம் செய்த இந்தியா.. நியூசிலாந்தை 214 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்!


மேலும் படிக்க: Viral Video: கையில் பீர்.. உற்சாக நடனம்.. இங்கிலாந்து வீரர் டாம் ஹார்ட்லியின் வைரல் வீடியோ!