அசத்தலாக பந்து வீசிய டாம் ஹார்ட்லி:


இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதன்படி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதன்படி, இங்கிலாந்து அணி தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி 420 ரன்களை குவித்தது.


ஆனால், முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 436 ரன்கள் எடுத்து, இரண்டாவது இன்னிங்ஸில் 202 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.


இந்திய போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவர்கள் ஒல்லி போப் மற்றும் டாம் ஹார்ட்லிதான். இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் துறையில் ஒல்லி போப் 196 ரன்கள் விளாசியதுபோல், பந்து வீச்சை பொறுத்தவரை டாம் ஹார்ட்லி இந்திய அணியின் பேட்டர்களை மிரட்டினார் என்றே சொல்லவேண்டும். 26 ஓவர்கள் வீசிய டாம் ஹார்ட்லி 5 ஓவர்களை மெய்டன் செய்து 62 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் டாப் பேட்டர்களான ரோகித் சர்மா, யஜஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் இவரது பந்தில் தான் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்கள்.


கையில் பீருடன் உற்சாக நடனம்:






இந்நிலையில் தான் 24 வயதே ஆன இங்கிலாந்து அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் டாம் ஹார்ட்லி நடனம் ஆடும் வீடியோ ஒன்றை இங்கிலாந்து பார்மி ஆர்மி வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்த வீடியோவில் பீரை தனது கைகளில் பிடித்துக்கொண்டு டேபில் மீதி ஏறி நின்று டாம் ஹார்ட்லி உற்சாகத்துடன் நடனம் ஆடுகிறார். தற்போது இவர் நடனம் ஆடும் இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க: IND v ENG Test: 3-வது டெஸ்ட் போட்டியிலாவது அணிக்கு திரும்புவாரா விராட் கோலி? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!


மேலும் படிக்க: Mitchell Starc: "களத்திற்கு வெளியே விராட் கோலி வேற மாதிரி" : அனுபவம் பகிர்ந்த மிட்செல் ஸ்டார்க்!