அண்டர் 19 உலகக் கோப்பை:


19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கு பெற்று விளையாடி வரும் இந்த தொடரின் குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்து தற்போது சூப்பர் 6 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய கிரிக்கெட் அணி அபாரமாக விளையாடி குரூப் சுற்றில்போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.


இந்நிலையில், இன்று சூப்பர் 6 போட்டிகள் நடைபெற்றது. இதற்காக இரண்டு குரூப்களாக அணிகள் பிரிக்கப்பட்டன.  இதில் குரூப் 1-ல் இடம்பெற்றுள்ள இந்தியா முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. அதன்படி தென்னாப்பிரிக்காவின் ப்ளூம் ஃபோன்டைன் நகரில் உள்ள மங்காங் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. அதன்படி, கடந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இந்த போட்டியிலும் வெற்றி முனைப்புடன் களம் இறங்கியது.


 


டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆதர்ஷ் சிங் மற்றும் அர்ஷின் குல்கர்னி ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில், இந்திய அணி 28 ரன்கள் எடுத்திருந்த போது அர்ஷின் குல்கர்னி 9 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஆதர்ஷ் சிங் 58 பந்துகளில் 52 ரன்களை விளாசினார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த முஷீர் கானும் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்களது ஜோடி 105 ரன்கள் வரை களத்தில் நின்றது. அப்போது நியூசிலாந்து அணி வீரர் ஜாக் கம்மிங் வீசிய பந்தில் ஆதர்ஷ் சிங் விக்கெட்டை பறிகொடுத்தார்.


அதிரடியாக சதம் விளாசிய முஷீர் கான்:


பின்னர் முஷீர் கானுடன் இந்திய அணியின் கேப்டன் உதய் சஹாரன் இணைந்தார். 57 பந்துகள் களத்தில் நின்ற அவர் 34 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனிடையே நியூசிலாந்து அணியினரின் பந்துகளை பறக்கவிட்டிக்கொண்டிருந்தார் முஷீர் கான். பின்னர் வந்த ஆரவெல்லி அவனிஷ் மற்றும் பிரியன்ஷு மோலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.  இதனிடையே அதிரடியாக சதம் விளாசிய முஷீர் கான் 131 ரன்களில் அவுட் ஆனார். அதன்படி, 126 பந்துகள் களத்தில் நின்ற அவர் 13 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இவ்வாறாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 295 ரன்களை குவித்தது.  பின்னர், 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது நியூசிலாந்து அணி.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக  களம் இறங்கிய டாம் ஜோன்ஸ் டக் அவுட் ஆகி வெளியேற மற்றொரு ஆட்டக்காரரான ஜேம்ஸ் நெல்சன் 10 ரன்களில் நடையைக்கட்டினார்.


214 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி:


பின்னர் களம் இறங்கிய சினேஹித் ரெட்டி டக் அவுட் ஆனார். அதனைத்தொடர்ந்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில்  விக்கெட்டை பறிகொடுத்து 28.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் இந்திய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.  இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்த வரை சௌமி பாண்டே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், ராஜ் லிம்பானி மற்றும் முஷீர் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு பங்காற்றினார்கள்.