கிரிக்கெட் உலகில் மிகவும் புகழ் பெற்ற டெஸ்ட் தொடர்களில் ஒன்று ஆஷஸ் டெஸ்ட் தொடர். இந்தத் தொடரின் முதல் போட்டி பிரிஸ்பேயினில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இன்று தனது முதல் இன்னிங்ஸை விளையாடியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக ஆடி வரும் டிராவிஸ் ஹெட் 115* ரன்களுடன் களத்தில் உள்ளார். 


இந்நிலையில் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பேட்டிங்கில் சொதப்பியது என்றால் இரண்டாம் நாள் ஆட்டத்தில் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் சொதப்பியுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் வார்னருக்கு பல முறை லைஃப் கொடுத்தனர். அதை பயன்படுத்தி கொண்ட டேவிட் வார்னர் அரைசதம் கடந்து 94 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இந்தச் சூழலில் இங்கிலாந்து ஃபில்டிங் மற்றும் பந்துவீச்சில் செய்த தவறுகள் என்னென்ன?


ஸ்டோக்ஸ் நோ பால்:


இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆட்டத்தின் 13ஆவது ஓவரை வீசினார். அந்த ஒவரின் 4ஆவது பந்தில் அவர் டேவிட் வார்னரின் விக்கெட்டை எடுத்தார். அந்த பந்தில் அவர் வார்னரை கிளின் பொல்ட் செய்தார். எனினும் அதற்குபின்பு நடுவர்கள் பென் ஸ்டோக்ஸ் நோ பால் வீசினாரா என்று பார்த்தனர். அப்போது அவர் நோ பால் வீசியிருந்தது தெரியவந்தது. இதனால் வார்னர் அவுட் திரும்ப பெறப்பட்டது. அந்த சமயத்தில் டேவிட் வார்னர் 17 ரன்கள் எடுத்திருந்தார்.






பெர்ன்ஸ் கேட்ச் ட்ராப்:


ஆட்டத்தின் 32ஆவது ஓவரை ராபின்சன் வீசினார். அப்போது 5ஆவது பந்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்தார். அந்த கேட்சை ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த ரோரி பெர்ன்ஸ் தவறவிட்டார். மிகவும் சுலபமான கேட்சை பெர்ன்ஸ் தவறவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் வார்னர் 48 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். 






ஹசிப் ஹமீது ரன் அவுட் மிஸ்:


இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 37ஆவது ஓவரை மார்க் வூட் வீசினார்.  அந்த ஓவரின் கடைசி பந்தை வார்னர் ஷாட் லெக் ஃபில்டரின் கையில் அடித்துவிட்டு கோட்டைவிட்டு வெளியே வந்தார். அப்போது ஷாட் லெக்கில் ஃபில்டிங் செய்து கொண்டிருந்த ஹசிப் ஹமீது பந்தை ஸ்டெம்பை நோக்கி ஏறிந்தார். எனினும் அந்தப் பந்து ஸ்டெம்பில் படாமல் சென்றது. இதனால் மீண்டும் டேவிட் வார்னர் ஆட்டமிழக்காமல் தப்பித்தார். அந்த சமயத்தில் டேவிட் வார்னர் 60 ரன்கள் எடுத்திருந்தார். 






இவ்வாறு மூன்று முறை டேவிட் வார்னருக்கு இன்று இங்கிலாந்து அணியினர் லைஃப் கொடுத்தனர். இறுதியில் அவர் வார்னர் ராபின்சன் பந்துவீச்சில் ஸ்டோக்ஸ் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 


மேலும் படிக்க: இந்திய ஒருநாள் அணிக்கு புதிய கேப்டன்: விராட் கோலியை தூக்கிய பிசிசிஐ