இந்தியாவின் முக்கிய உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடர் இன்று தொடங்கியிருக்கிறது. 38 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் முதல் நாளிலேயே தமிழ்நாடு அணியும் மும்பை அணியும் மோதின. இந்த போட்டியில் தமிழக வீரரான ஷாரூக்கான் 35 பந்துகளில் 66 ரன்களை அடித்து அசத்தியுள்ளார்.
விஜய் ஹசாரே தொடரின் கடந்த சீசனில் தமிழ்நாடு அணி லீக் சுற்றோடு வெளியேறியிருந்தது. மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. இந்த இரண்டு அணிகளும் இந்த சீசனின் முதல் போட்டியில் இன்று மோதின. முதலில் தமிழ்நாடு அணியே பேட்டிங் செய்தது. 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து தமிழக அணி 290 ரன்களை எடுத்தது. இவ்வளவு ரன்களை எடுப்பதற்கு ஷாரூக்கானின் அதிரடி ஆட்டம் மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது. 35 பந்துகளில் 66 ரன்களை எடுத்திருந்தார். இந்த 66 ரன்களில் 54 ரன்களை பவுண்டரி மற்றும் சிக்சர்கள் மூலமே எடுத்தார். 6 பவுண்டரிக்களையும் 5 சிக்சர்களையும் அடித்திருந்தார்.
நம்பர் 7-இலேயே ஷாரூக்கான் இறங்கியிருந்தார். ஷாரூக்கானுக்கு முன்பாக இறங்கிய எந்த பேட்ஸ்மேனுமே 100 க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டிருக்கவில்லை. ஜெகதீசன் 71, சாய் சுதர்சன் 100, இந்திரஜித் 70, வாஷிங்டன் சுந்தர் 58, தினேஷ் கார்த்திக் 91, கௌசிக் 84 என்றே ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தனர். அதிகபட்சமாக யாருமே Run a Ball ஐ தாண்டி ஸ்கோர் செய்திருக்கவில்லை. இந்த சமயத்தில்தான் தனது அதிரடி மூலம் அணியின் ரன் வேகத்தை ஷாரூக்கான் ராக்கெட் வேகத்தில் அதிகரித்தார். 38 முதல் 47 இந்த 9 ஓவர்களில் மட்டும் 88 ரன்களை தமிழ்நாடு அணி அடித்திருந்தது. இந்த 9 ஓவர்கள்தான் தமிழ்நாடு 290 ரன்களை அடிக்க காரணமாக அமைந்தது. இந்த 9 ஓவர்களில் இவ்வளவு ரன்கள் வர காரணமாக அமைந்தவர் ஷாரூக்கானே. 188.57 ஸ்ட்ரைக் ரேட்டில் 66 ரன்களை அடித்திருந்தார்.
ஒரு ஃபினிஷராக லோயர் மிடில் ஆர்டர் வீரராக தமிழக வீரர் ஷாரூக்கான் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஒரு போட்டியில் பெர்ஃபார்ம் செய்துவிட்டு அடுத்த போட்டிகளில் சொதப்பும் வேலையெல்லாம் கிடையவே கிடையாது. தொடர்ச்சியாக சீராக ஸ்கோர் செய்கிறார். பெரும்பாலும் அணி இவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றி விடுகிறார். கடைசியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு சையத் முஷ்தாக் அலி டி20 தொடரின் இறுதிப்போட்டியிலும் கடைசி பந்தில் சிக்சர் அடித்து தமிழ்நாடை சாம்பியனாக்கியிருப்பார்.
ஐ.பி.எல் மெகா ஏலம் டிசம்பர் கடைசியிலோ ஜனவரி முதல் வாரத்திலோ நடக்கக்கூடும். பஞ்சாப் அணி ஷாரூக்கானை ரீட்டெயின் செய்யாமல் விடுவித்திருக்கிறது. எனவே புதிய இரண்டு ஐ.பி.எல் அணிகளுக்கு நேரடியாக சென்றாலும் சரி மெகா ஏலத்தில் பங்கேற்றாலும் சரி ஷாரூக்கான் பல கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்படுவார்.
பல அணிகளும் அவருக்காக போட்டி போடடும். அதற்கு மிக முக்கிய காரணமாக சையத் முஷ்தாக் அலி, விஜய் ஹசாரே தொடர்களில் அவர் செய்த பெர்ஃபார்மென்ஸ்கள் அமையும். ஷாரூக்கானை ஏலத்தில் எடுப்பது பிரச்சனையல்ல. ஏலத்தில் எடுக்கும் அணிகள் அவருக்கு சரியான வாய்ப்புகளை வழங்கி முழுமையாக பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும்பட்சத்தில் தனி ஆளாக போட்டியை வென்று கொடுக்கும் வீரனாக ஷாரூக்கான் கலக்குவார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்