அறிமுக வீரராக களமிறங்கும் துருவ் ஜூரல்: 


இந்திய அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், கடந்த ஜனவரி 11 ஆம் தேதி மொஹாலியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இச்சூழலில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் விளையாட உள்ளது. முன்னதாக இந்த போட்டியில் ரோகித் மற்றும் கோலி விளையாட உள்ளது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அதன்படி, இந்த டி 20 போட்டிகளுக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் இந்திய அணி முதல் போட்டியை ஜனவரி 25 ஆம் தேதி விளையாட உள்ளது. இதற்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அண்மையில் வெளியிட்டது. இதில், கே.எல்.ராகுல்,கே.எஸ்.பரத் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரராக துருவ் ஜூரல் களம் இறங்க உள்ளார்.


இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியில் தம்மை கவரும் வகையில் செயல்பட்ட துருவ் ஜூரேல் மேட்ச் வின்னர் என அந்த அணியின் பயிற்சியாளரான இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா தெரிவித்துள்ளார்.


 எனக்கு பெருமையாக உள்ளது:



இது தொடர்பாக அவர் பேசுகையில், “துருவ் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வானதில் எனக்கு பெருமையாக இருக்கும் அதேநேரம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஏனெனில் ஐ.பி.எல். தொடரை தாண்டி இந்தியாவுக்காக தரமான வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதே ராஜஸ்தான் அணியின் இலக்காக இருக்கிறது. அதை கடந்த சில வருடங்களாக செய்து வரும் எங்களுடைய அணியில் தற்போது துருவ் ஜூரேல் புதியவராக வந்துள்ளார். இளம் வீரரான  அவர் இன்று பிடித்துள்ள இந்த இடத்திற்கு மிகவும் கடினமாக உழைத்துள்ளார்.
 
எங்களுடைய முன்னேற்ற முகாமில் இருந்த அவர் தற்போது டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளது சிறப்பானதாகும். அவரால் அழுத்தத்தை உணர்ந்து விளையாட முடியும். குறிப்பாக கடந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங் செய்வதற்கு மிகவும் மிகவும் கடினமான இடத்தில் களமிறங்கிய அவர் நிறைய ரன்கள் எடுத்தார்.  தற்போதைக்கு அவர் டி20 கிரிக்கெட்டில் மேட்ச் வின்னராக இருக்கிறார்” என்று புகழ்ந்துள்ளார் சங்ககாரா .


மேலும் படிக்க: India vs Afghanistan t20: இரண்டாவது டி20... தோனியின் சாதனையை முறியடிப்பாரா ஹிட் மேன் ரோகித் சர்மா?


 


மேலும் படிக்க: IND vs AFG T20I: அரைசதம் விளாசிய ஷிவம் துபே... புகழ்ந்து தள்ளிய ஹர்பஜன் சிங்!