இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் சிறப்பான பேட்ஸ்மேன்களில் ஒருவர் விவிஎஸ் லக்‌ஷ்மண். இந்திய கிரிக்கெட் அணியின் ஃபாபுலஸ் ஃபைவ் என்று அழைக்கப்படுபவர்களில் இவரும் ஒருவர். சேவாக்,ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி ஆகியோர் மற்றவர்கள். இந்த வரிசையில் எப்போதும் சிறப்பான இடத்தை பிடித்தவர் லக்‌ஷ்மண். அதனால் தான் என்னவோ இவருக்கு  ‘very very special லக்‌ஷ்மண்’ என்ற பட்ட பெயரும் உண்டு. பொதுவாக ஹைதராபாத்தில் இருந்து இந்திய அணிக்கு வந்தவர்களில் அசாரூதினை போல் மிகவும் க்ளாஸ் ஆன வீரர் லக்‌ஷ்மண். 


பல பேட்டிங் ஷார்ட்ஸ் அடிக்கும் போது அவருடைய கால்களில் மிகவும் குறைவான நகர்த்தல் மட்டுமே இருக்கும். ஆனால் அது பார்ப்பதற்கும் மிகவும் எளிமையாக, அழகாக ஒரு மாஸ் ஆக இருக்கும். அவருக்கு மிகவும் பிடித்த அணி என்றால் அது ஆஸ்திரேலியா என்றே நாம் கண்களை மூடி கொண்டு கூறலாம். ஏனென்றால் 1990களின் பிற்பாதியில் மிகவும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை நொறுக்கியவர் வி.வி.எஸ் லக்‌ஷ்மண். மெக்ராத், கிலெஸ்பி, ஷேன் வார்னே, மெக்கில், பிரட் லீ ஆகியோரின் பந்துவீச்சை தன்னுடைய அசத்தலான பேட்டிங்கின் மூலம் திணறடித்து இவர் பல ரன்களை குவித்தார். 


குறிப்பாக 1998ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இவர் 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2434 ரன்களை அடித்துள்ளார். அத்துடன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 49.67 என்ற சராசரியையும் லக்‌ஷ்மண் வைத்திருந்தார். இப்படி லக்‌ஷ்மண் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடிய சிறப்பான ஆட்டங்கள் என்னென்ன?


95 -கொல்கத்தா 1998:




1998ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விவிஎஸ் லக்‌ஷமண் முதல் இன்னிங்ஸில் களமிறங்கி 95 ரன்கள் அடித்தார். அந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 635 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. அதில் லக்‌ஷ்மண் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 95 ரன்கள் எடுத்தார். அந்தப் போட்டியில் இந்திய கேப்டன் அசாரூதின் 163 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். 


 


167- சிட்னி 2000:


1999-2000ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் 3ஆவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு சுருண்டது. அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணி 552 ரன்கள் விளாசியது. இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியில் விவிஎஸ் லக்‌ஷ்மண் மட்டும் ஒரே வீரராக இந்தியாவிற்காக போராடினர். இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 261 ரன்கள் அடித்தது. அதில் லக்‌ஷ்மண் மட்டும் 167 ரன்கள் அடித்தார். இந்திய அணி போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலும் அவர் ஆஸ்திரேலிய பந்துவீச்சை தனி ஆளாக திணறடித்தார். 




59 & 281- கொல்கத்தா 2001:


ஆஸ்திரேலிய அணி 2001ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்தது. அதில் 2ஆவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதில் லக்‌ஷ்மண் மட்டும் 59 ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் இந்திய அணி ஃபாலோ ஆன் விளையாடியது. அதில் ராகுல் திராவிட் மற்றும் லக்‌ஷ்மண் ஜோடி ஆஸ்திரேலிய பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. திராவிட் 180 ரன்களும், விவிஎஸ் லக்‌ஷ்மண் 281 ரன்களும் விளாசினார். இது தான் விவிஎஸ் லக்‌ஷ்மண் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்த அதிகபட்ச ஸ்கோராகும். இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 


 


148- அடிலெய்ட் 2003:




2003ஆம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்தது. அப்போது 2ஆவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 556 ரன்கள் அடித்தது. அதன்பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் மீண்டும் ராகுல் திராவிட்-விவிஎஸ் லக்‌ஷ்மண் கூட்டணி மிரட்டியது. ராகுல் திராவிட் 233 ரன்களும், விவிஎஸ் லக்‌ஷ்மண் 148 ரன்களும் அடித்தனர். இந்தப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


79- பெர்த் 2008:




2008ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்தது. அப்போது பெர்த் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 330 அடித்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணியில் லக்‌ஷ்மண் 79 ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்கு 400 ரன்களுக்கு மேல் செல்ல முக்கிய காரணமாக அமைந்தார். அந்தப் போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 


 


73*- மொகாலி 2010:




2010ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்திய சுற்றுப்பயணம் செய்தது. அப்போது முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 428 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 405 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் இந்திய அணிக்கு 216 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அப்போது இந்திய அணி 76 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. அந்த சமயத்தில் களமிறங்கிய விவிஎஸ் லக்‌ஷ்மண் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு சமயத்தில் 124 ரன்களுக்கு இந்திய அணி 8 விக்கெட் இழந்தது. ஆனால் பொறுப்புடன் பந்துவீச்சாளர்களுடன் பேட்டிங் செய்த விவிஎஸ் லக்‌ஷ்மண் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 73* ரன்கள் சேர்த்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.  


மேலும் படிக்க: மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதா இந்திய கிரிக்கெட் அணி... வெளிப்படையாக பூம்ரா உடைத்த உண்மை!