டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் இன்று மோதவிருக்கின்றனர்.
க்ரூப் 2 வில் பாகிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்துவதை போல க்ரூப் 1 இல் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. இதுவரை ஆடியிருக்கும் மூன்று போட்டிகளிலும் வென்றிருக்கிறது. வெற்றியென்றால் சாதாரண வெற்றியில்லை எதிரணியை மொத்தமாக காலி செய்து எழவே முடியாதபடிக்கு வீழ்த்தியிருந்தது. பேட்டிங் பௌலிங் இரண்டிலுமே முழுமையான ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. ஆடியிருக்கும் 3 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறது. ஒரு போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறது. பேட்டிங்கிலும் வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான போட்டியை 8.2 ஓவரிலும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியை 14.1 ஓவரிலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியை 11.4 ஓவரிலும் டார்கெட்டை சேஸ் செய்து முடித்திருந்தது.
ஒரு டி20 போட்டிக்கு தேவையான அத்தனை அம்சமும் ஒருசேர அமையப்பெற்ற அணியாக இங்கிலாந்து அசத்தி வருகிறது. ஆல்ரவுண்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தொடர் வெற்றியையும் பெற்றுக் கொண்டிருக்கிறது. மில்ஸ், அடில் ரஷீத், க்றிஸ் ஜோர்டன் என மூன்றே மூன்று மெயின் பௌலர்களை மட்டுமே வைத்திருக்கிறது. இந்த 3 பேரும் 12 ஓவர்களை வீச மீதமிருக்கும் 8 ஓவர்களை ஆல்ரவுண்டர்களை வைத்து சமாளித்துக் கொள்கின்றனர். மொயீன் அலி, க்றிஸ் வோக்ஸ், லிவிங்ஸ்டன் மூன்று ஆல்ரவுண்டர்களும் பௌலிங்கில் சாமர்த்தியமாக விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுக்கின்றனர். குறிப்பாக, பெரிதாக பந்துவீசாத லிவிங்ஸ்டன் இந்த தொடரில் சர்ப்ரைஸாக வந்து பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்துவதோடு எக்கனாமிக்கலாகவும் வீசி விட்டு செல்கிறார். இதுவரை இங்கிலாந்தின் பந்துவீச்சு சொதப்பவில்லை. அப்படி சொதப்பினாலும் பேட்டிங்கை வைத்தி சமாளித்துக் கொள்ளும் வாய்ப்பும் இங்கிலாந்திற்கு இருக்கிறது.
இலங்கை அணியை பொறுத்தவரைக்கும் சூப்பர் 12 சுற்றில் ஆடுவதற்கே தகுதிச்சுற்றில் ஆட வேண்டிய அவல நிலைக்கு சென்றிருந்தது. ஆனால், தகுதிச்சுற்றில் சிறப்பாக ஆடி சூப்பர் 12 சுற்றிற்கு வந்துவிட்டது. இங்கே முதல் போட்டியில் வங்கதேசத்தை சிறப்பாக வீழ்த்திய இலங்கை அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை தழுவியது. மூன்றில் ஒரு போட்டியை மட்டுமே வென்றிருக்கும் இலங்கை அணிக்கு அரையிறுதி வாய்ப்பு ரொம்பவே குறைவு. ஆனாலும், முடிந்தவரை முயன்று பார்க்கும் முனைப்போடு அந்த அணி களமிறங்குகிறது. பந்துவீச்சுதான் அந்த அணியின் பலமே. வனிந்து ஹசரங்கா, மஹீஸ் தீக்ஷனா என இரண்டு அற்புதமான ஸ்பின்னர்களை வைத்திருக்கிறார்கள். லகிரு குமாராவும், சமீராவும் 150 கி.மீ வேகத்தில் வீசி ஆச்சர்யப்பட வைக்கின்றனர். பேட்டிங்கை பொறுத்தவரைக்கும் எதாவது ஒரு வீரர் மட்டுமே நின்று ஆடுகிறார். மற்றவர்களெல்லாம் அடுத்தடுத்து வீழ்ந்து அதிர்ச்சி கொடுக்கின்றனர் அல்லது டாட்களாக ஆடி ரன் வேகத்தையே குறைத்துவிடுகின்றனர். நிஷாங்கா, பெராரா, அசலங்கா, பனுகா ராஜபக்சே என எல்லாரும் சேர்ந்து பேட்டிங் ஆடினால் அந்த அணி ஒரு நல்ல ஸ்கோரை எட்ட முடியும்.
இலங்கை Vs இங்கிலாந்து இந்த போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. துபாய், அபுதாபி, ஷார்ஜா இந்த மூன்றில் மிகவும் மெதுவான மந்தமான பிட்ச்சை கொண்ட மைதானமாக ஷார்ஜா இருக்கிறது. இந்த தொடரில் இங்கிலாந்து இன்னும் ஷார்ஜாவில் ஒரு போட்டியை கூட ஆடியிருக்கவில்லை. ஆனால், இலங்கை சூப்பர் 12 சுற்றில் மட்டும் 2 போட்டிகளை ஷார்ஜாவில் ஆடியிருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியை சேஸ் செய்து வென்றிருந்தது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியை டிஃபண்ட் செய்து நெருங்கி வந்து தோற்றிருந்தது. இந்த அனுபவம் இலங்கை அணிக்கு கைக்கொடுக்கும். கடைசியாக ஆடிய போட்டியில் இதே ஷார்ஜாவில் வனிந்து ஹசரங்கா ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். வனிந்து ஹசரங்காவும் மஹீஸ் தீக்ஷனாவும் வீசப்போகும் 8 ஓவர்கள் இங்கிலாந்து அணிக்கு கடினம் அளிக்கக்கூடியதாக இருக்கும்.
இங்கிலாந்து அணியிலும் மொயீன் அலி, லிவிங்ஸ்டன், அடில் ரஷீத் என ஷார்ஜா மைதானத்திற்கு ஏற்ப மூன்று ஸ்பின்னர்கள் இருப்பது அவர்களுக்கும் பலமாக இருக்கிறது. ஜேசன் ராய், பட்லர், பேர்ஸ்ட்டோ என அதிரடியான பேட்டிங் லைன் அப்பை வைத்திருக்கும் இங்கிலாந்து அணி அதிரடியோடு கொஞ்சம் நிதானத்தையும் கலந்து ஆடினாலே இந்த போட்டியை எளிதில் வென்றுவிட முடியும். இந்த போட்டியை இங்கிலாந்து வெல்லும்பட்சத்தில் அந்த அணி அரையிறுதிக்கு தகுதிப்பெறுவது 100% உறுதியாகிவிடும். இலங்கை அணி வெல்லும்பட்சத்தில் குறைந்தபட்ச நம்பிக்கையோடு தொடரில் தொடர்ந்து நீடிக்க முடியும். ஷார்ஜா போட்டி எந்த அணிக்கு சாதகமாக சுழல்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.