டி20 உலகக்கோப்பையின் முக்கியமான ஆட்டத்தில் நியுசிலாந்து அணியிடம் நேற்று இந்திய அணி தோற்றிருந்தது. இந்திய அணியின் மோசமான தோல்வியை தொடர்ந்து பலரும் பல விதமாக இந்திய அணியை விமர்சித்து வருகின்றனர். இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் காரணம் என தாங்கள் ஆய்ந்தறிந்த விஷயங்களை இணையத்தில் கொட்டி கொண்டிருக்கின்றனர். 

 

இந்நிலையில், இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக பலரும் கவனிக்க மறந்த ஒரு விஷயத்தை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் பயோ பபிளிலே இருந்து கிரிக்கெட் ஆடியிருக்கிறீர்கள் இது உங்களுக்கு ஒருவித மனச்சோர்வை ஏற்படுத்தவில்லையா? என கேட்கப்பட்ட கேள்விக்கு,

 

ஆம், நாங்கள் ஆறுமாதமாக பயோ பபிள் சூழலில் இருக்கிறோம். நிச்சயமாக எங்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. நாங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிட்டாக வேண்டியிருக்கிறது. அதையெல்லாம் தாண்டித்தான் கிரிக்கெட் ஆட வேண்டும். ஆனாலும் மனதளவில் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. பயோ பபிளில் இருந்து கொண்டு ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்வது மனதளவில் ரொம்பவே சோர்வடைய செய்கிறது என பும்ரா பதிலளித்திருக்கிறார். வீரர்கள் மனதளவில் பாதிக்கப்படும் விஷயங்கள் குறித்து அவ்வளவாக பேசப்படுவதே இல்லை.

 

கடந்த 2020 ஐ.பி.எல் சீசனிலிருந்தே இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கின்றனர். தொடர்ச்சியாக ஒரு பயோ பபிளில் இருந்து இன்னொரு பயோ பபிளுக்கு மாறிக்கொண்டே இருக்கின்றனர். 2020 ஆகஸ்ட் மாதத்தில் முதன்முதலாக துபாயில் இந்திய வீரர்கள் பயோ பபிளுக்குள் நுழைந்தனர். அந்த சீசன் முடிந்தவுடன் அப்படியே துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு பயணித்து அங்கே பயோபபிளிலிருந்து சீரிஸை முடித்தனர். ஜனவரியில் முதல் பாதியில் அந்த சீரிஸ் முடிந்தவுடன் ஒரு சில நாட்கள் மட்டுமே வீரர்களுக்கு ஓய்வு கிடைத்தது. உடனே ஃபிப்ரவரியில் இங்கிலாந்து தொடர் ஆரம்பித்தது அதற்கான பயோபபிளுக்குள் சென்றனர்.

 

அடுத்து மீண்டும் ஐ.பி.எல் பயோ பபிள். ஐ.பி.எல் பாதியிலேயே முடிந்தவுடன் சில நாட்கள் ஓய்விற்கு பிறகு இங்கிலாந்துக்கு பயணித்து அங்கே பயோ பபிளுக்குள் இருந்தனர். இங்கிலாந்தில் மட்டும் இடையில் சில நாட்கள் வீரர்களுக்கு ஓய்வு கிடைத்தது. அதிலும் சில வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் கட்டுப்பாடுகள் இறுகியது. அந்த இங்கிலாந்து தொடர் முடிந்தவுடன் ஐ.பி.எல் இரண்டாம் பாதிக்கான பயோ பபிள். இப்போது உலகக்கோப்பை.




இந்திய வீரர்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கின்றனர். அதுவும் பயோ பபிள் மாதிரியான கட்டுப்பாடான சூழலில் எனும் போது அது இயற்கையாகவே மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்திய வீரர்கள் மட்டுமில்லை பயோ பபிளினால் ஏற்படும் மனச்சோர்வு குறித்து தென்னாப்பிரிக்க வீரர் குவிண்டன் டீகாக் வெளிப்படையாக பேசியுள்ளார். இங்கிலாந்து வீரரான லிவிங்ஸ்டன் பயோ பபிள் ஏற்படுத்திய மனச்சோர்வில் முதல் பாதி ஐ.பி.எல் தொடரிலிருந்து இடையிலேயே விலகியிருந்தார். டிசம்பர் மாதம் நடைபெறும் ஆஷஷ் தொடருக்காக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு பயணிக்க இருக்கிறது. ஆனால், ஆஸ்திரேலியாவில் இருக்கும் அதீத பயோ பபிள் கட்டுப்பாடுகளுக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் இப்போதே போர்க்கொடி தூக்கிவிட்டனர். இந்த சச்சரவு ஆஷஸ் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா எனும் கேள்வியையே எழுப்பியிருந்தது.

 

இதிலிருந்தே பயோ பபிள் வீரர்களிடம் ஏற்படுத்தும் மனச்சோர்வை புரிந்துக் கொள்ளலாம். விளையாட்டுலகம் குறிப்பாக கிரிக்கெட் உலகம் இப்போதுதாம் மனரீதியான பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேச தொடங்கியிருக்கிறது. மேக்ஸ்வெல், பென் ஸ்டோக்ஸ் மாதிரியான வீரர்கள் மனரீதியில் தேறி வருவற்காக கிரிக்கெட்டிலிருந்தே சில காலம் ஓய்வெடுத்தனர். மனநலத்தை பற்றி பேசுவோரை ஒரு மாதிரியாக பார்க்கும் நிலையே இன்னமும் நீடிக்கிறது. அதுவும் இந்தியாவில் கிரிக்கெட்டர்களை மிகப்பெரிய ஹீரோக்களாக பார்க்கிறோம். அவர்களை அசாதாரணமானவர்களாக ஒரு உச்சியில் தூக்கி வைத்திருக்கிறோம். அந்த பிம்பம் உடைபட்டுவிடக்கூடாது என்பதற்காகவே பல கிரிக்கெட் வீரர்களும் மனரீதியான விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேச மறுக்கின்றனர். உலகளவில் அதிகமாக கிரிக்கெட் ஆடும் இந்திய வீரர்கள் இந்த மனச்சோர்வு பற்றிய விஷயத்தை பற்றி வெளியில் பேசும் போது அதற்கான கவனம் இன்னும் கூடுதலாக கிடைக்கும். பும்ரா அதை தொடங்கி வைத்துள்ளார்.

 

சிமோன் பைல்ஸ் அமெரிக்காவின் மாபெரும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை. வயது 24 மட்டுமே ஆகிறது. 2016 ஒலிம்பிக்கில் 4 தங்கம் 1 வெள்ளி என 5 பதக்கங்களை வென்றிருந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கிலும் பதக்க வேட்டை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்காமல் போகவே பெரும் அழுத்தத்திற்கு உள்ளானர். டோக்கியோ ஒலிம்பிக்கில் அவருக்கான போட்டிகள் இன்னமும் மீதமிருந்த நிலையில் இடையிலேயே ஒலிம்பிக்கிலிருந்து விலகினார். மனரீதியாக நான் மிகவும் சோர்வடைந்திருக்கிறேன். அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறேன். எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது என வெளிப்படையாக பேசியிருந்தார். மனநலத்திற்காக ஒலிம்பிக் வாய்ப்பையே உதறியிருந்தார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிப்படையாக பேசட்டும். மனரீதியான அழுத்தங்களை வெளியே சொல்வது அசிங்கமில்லை!


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண