கிரிக்கெட் ரசிகர்களுக்கு எப்போதும் விருந்து அளிக்கும் தொடரில் முதன்மையானது 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் ஆகும். ஐ.பி.எல்., டி20 என்று எத்தனை போட்டித் தொடர்கள் வந்தாலும் இந்த 50 ஓவர் உலகக்கோப்பைக்கு உள்ள பெருமை என்றுமே தனித்துவம் வாய்ந்ததே ஆகும்.
பென் ஸ்டோக்ஸ்:
இந்த நிலையில், உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5-ந் தேதி தொடங்க உள்ள நிலையில் அனைத்து அணிகளும் அதற்கு தயார் ஆகி வருகின்றனர். இந்த நிலையில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தன்னுடைய ஒருநாள் போட்டி ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார். மேலும், உலகக்கோப்பை தொடரில் அவர் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பென் ஸ்டோக்சின் இந்த முடிவை அவரது ரசிகர்களும், இங்கிலாந்து ரசிகர்களும் கொண்டாடினாலும் சில வீரர்கள் அவரது முடிவை விமர்சித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெய்ன், பென் ஸ்டோக்சின் இந்த முடிவை மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.
விமர்சித்த டிம் பெய்ன்:
இதுதொடர்பாக, அவர் அளித்துள்ள பேட்டியில், “பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டி ஓய்வில் இருந்து திரும்ப வந்துள்ளார். இது மிகவும் சுவாரஸ்யமானதுதான். இது எப்படி உள்ளது என்றால், நான், நான், நான் என்பது போல உள்ளது. நான் எங்கு விளையாட வேண்டும், எப்போது விளையாட வேண்டும் என்பதை நான்தான் தேர்வு செய்வேன். நான் மிகப்பெரிய தொடர்களில் மட்டுமே ஆடுவேன் என்பது போல உள்ளது.
அவர் ஒருநாள் போட்டிகளில் ஆடி 1 ஆண்டுக்கு மேல் ஆகிறது. மன்னிக்கவும், நீங்கள் சென்று பெஞ்சில் உட்காருங்கள். இப்போது நான் விளையாட வேண்டும் என்பது போல இருக்கிறது.” இவ்வாறு பென் ஸ்டோக்சை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டிம்பெய்ன் சரமாரியாக விமர்சித்தார்.
உலகக்கோப்பை:
இங்கிலாந்து மண்ணில் கடந்த முறை நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பென் ஸ்டோக்சின் அபாரமான பேட்டிங்காலே இங்கிலாந்து கோப்பையை வென்றது. அந்த தொடர் முழுவதும் பேட்டிங், பவுலிங்கில் அசத்திய ஸ்டோக்ஸ் இறுதிப்போட்டியில் மட்டும் 98 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 84 ரன்களை எடுத்திருந்தார்.
இங்கிலாந்து வெற்றி பெற்றது இன்றும் சர்ச்சையாக விமர்சிக்கப்பட்டாலும் ஸ்டோக்சின் ஆட்டம் அபாரமாக இருந்தது என்பதே உண்மை. பல நெருக்கடியான தருணங்களில் டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்திற்கு வெற்றியைத் தேடித்தந்த வீரர் பென் ஸ்டோக்ஸ் என்பதால் அவரது வரவு இங்கிலாந்து அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் கடந்த 1 ஆண்டுகளாக எந்த சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆடாத பென் ஸ்டோக்சை அணிக்குள் அழைப்பதற்கு பலரும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். 32 வயதான பென் ஸ்டோக்ஸ் இதுவரை 105 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3 சதம், 21 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 924 ரன்களை எடுத்துள்ளார். மேலும், சிறந்த ஆல்ரவுண்டரான அவர் ஒருநாள் போட்டியில் 74 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
மேலும் படிக்க: INDvsIRE 1ST T20: ஆடாம ஜெயிச்சோமடா..! அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா.. 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
மேலும் படிக்க: Ben Stokes To Imran Khan: பென் ஸ்டோக்ஸ் முதல் இம்ரான் கான் வரை.. ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்து களத்துக்கு திரும்பிய வீரர்கள்!