இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஒருநாள் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட போவதாக அறிவித்தார். இதுதான் கடந்த இரண்டு நாட்களாக கிரிக்கெட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. முன்னதாக, நேற்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான தற்காலிக 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அறிவித்தது. இந்த அணியில் மீண்டும் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். 


கடந்த 2019ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ். இந்தநிலையில், மீண்டும் கோப்பையை இங்கிலாந்து அணிக்கு வென்றுதரும் முனைப்பில் களமிறங்கியுள்ளார். 


இப்படியாக சூழலில் இதுவரை தங்களது சொந்த நாட்டிற்காக ஓய்வு பெற்று மீண்டும் விளையாடிய 7 கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை இங்கே காணலாம். 


பென் ஸ்டோக்ஸ்: 


இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்து வரும் பென் ஸ்டோக்ஸ், கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி பணி சுமை காரணமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஓய்வு குறித்து அப்போது அவர் தெரிவிக்கையில், மூன்று விதமாக வடிவங்களிலும் தொடர்ந்து விளையாடுவது மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அதிக அழுத்ததை கொடுக்கிறது. அதன் காரணமாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். தொடர்ந்து, டெஸ்ட் வடிவத்தில் விளையாடுவேன் என்றார். கிட்டதட்ட ஒரு ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்ட் 16ம் தேதியான நேற்று, ஒருநாள் போட்டியில் அறிவித்த ஓய்வை ரிடர்ன் செய்து கொண்டார். 


2019ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை  நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். 


இம்ரான் கான்:



முன்னாள் பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனுமான இம்ரான் கான் ஓய்வை அறிவித்து மீண்டும் கிரிக்கெட் விளையாட களம் கண்டார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடானது கடந்த 1987ம் ஆண்டு கூட்டாக சேர்ந்து ஒருநாள் உலகக் கோப்பை போட்டியை நடத்தியது. இந்த உலகக் கோப்பைக்கு பிறகு இம்ரான் கான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அதிரடியாக அறிவித்தார். ஆனால், 1988ம் ஆண்டு அப்போதையை பாகிஸ்தான் அதிபராக இருந்த ஜியா- உல் - ஹக், இம்ரான் கானை மீண்டும் கிரிக்கெட் விளையாட வருமாறு அறிவித்தார். அதன்பிறகு, ஜனவரி 18, 1998 ம் ஆண்டு இம்ரான் கான் தனது முடிவை மாற்றிக்கொண்டு பாகிஸ்தான் அணிக்கு திரும்பினார். இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி 1992 ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த உலகக் கோப்பையை இங்கிலாந்தை வீழ்த்தி தட்டித்தூக்கியது. 


தமிம் இக்பால்: 


வங்கதேச கிரிக்கெட் அணியில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்தவர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் தமிம் இக்பால். இவர் கடந்த மாதம் ஜூலை 6ம் தேதி அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் வடிவங்களிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பிறகு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வற்புறுத்தலின்பேரில், ஜூலை 7ம் தேதியே வங்கதேச கிரிக்கெட் அணியில் விளையாட ஒப்புகொண்டார். 


ஜவகல் ஸ்ரீநாத்: 


புகழ்பெற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஜவகல் ஸ்ரீநாத், கடந்த 2002ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், அப்போதையை இந்திய கேப்டன் சவுரவ் கங்குலியின் வற்புறத்தலின் பேரில், அதே ஆண்டு இந்திய அணிக்கு திரும்பினார். 2003 நடந்த உலகக் கோப்பை வரை விளையாடி, அதற்பிறகு அனைத்து வகையாக கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெற்றார். 


ஹாஹித் அப்ரிடி: 


ஹாஹித் அப்ரிடி இதுவரை தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தம் 5 முறை ஓய்வை அறிவித்து அதை மாற்றிக்கொண்டார். 2006ம் ஆண்டு  டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வுபெற்ற அவர், 2010ம் ஆண்டு டெஸ்ட் விளையாட வந்தார். தொடந்து, 2 வாரங்களே விளையாடிய அப்ரிடி மீண்டும் ஓய்வை அறிவித்தார். 2011ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பைக்கு பிறகு, மே மாதம் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். ஆனால், 5 மாதங்களில் தனது முடிவை மாற்றிகொண்டு 2015 ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் விளையாடி, ஒருநாள் போட்டிகளில் ஓய்வை அறிவித்தார். பின்னர், 2017 ம் ஆண்டு டி20 வடிவத்திலும் ஓய்வு பெற்றார். 


மொயின் அலி: 


கடந்த 2021 செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இங்கிலாந்து நட்சத்திர ஆல்-ரவுண்டர் மொயின் அலி அறிவித்தார். அதன்பிறகு 2023 ஆஷஸ் தொடரில் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கட்டாயத்தின்பேரில் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட்டில் விளையாடிய அவர், மீண்டும் ஆஷஸ் முடிந்ததும் ஓய்வு பெற்றார். 


டுவைன் பிராவோ: 



வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டராக ஜொலித்த டுவைன் பிராவோ, கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் அனைத்து வகையாக கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து, ஒரு வருடம் கழித்து 2019 டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தின் மாற்றம் மற்றும் கீரன் பொல்லார்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, மீண்டும் அணிக்கு திரும்பினார். 2021 டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் அணிக்காக களமிறங்கி, பின்னர் ஓய்வு பெற்றார்.