அயர்லாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் மழை குறுக்கிட்டதால், இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


அயர்லாந்து சுற்றுப்பயணம்:


மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தை முடித்த, பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 3-2 என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து காயத்திலிருந்து மீண்டு 11 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச போட்டிகளுக்கு திரும்பியுள்ள, பும்ரா தலைமையில் இளம் இந்திய அணி தற்போது அயர்லாந்து சென்றுள்ளது.இந்நிலையில், டப்ளினில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.  


ஆரம்பமே அசத்தல்:


இதையடுத்து அயர்லாந்து அணி பேட்டிங் இறங்கியதும், 11 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடிய பும்ரா, தனது முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்திய அணியின் பந்துவீச்சில் தொடக்கத்தை விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும் காம்பெர் – மெக்கர்த்தி அதிரடியால் அந்த அணி 139 ரன்களை எட்டியது. இதையடுத்து, 140 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இளம் வீரர்களான ஜெய்ஸ்வால்  - ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்.


அடுத்தடுத்து விக்கெட்:


முதல் ஓவரிலே ஜெய்ஸ்வால் பவுண்டரிகளை விரட்டினாலும் அடுத்தடுத்த ஓவர்களை அயர்லாந்து சிக்கனமாக வீசியது. இதனால், இருவரும் நிதானமாக ஆடினர். ரன் ஓடுவதில் ஏற்பட்ட குழப்பத்தால் இவர்களில் ஒருவரை அவுட்டாக்கும் பொன்னான வாய்ப்பை அயர்லாந்து வீரர்கள் தவறவிட்டனர்.


முதல் 4 ஓவர்களில் நிதானம் காட்டிய இந்த ஜோடி 5வது ஓவரில் இருந்து அதிரடிக்கு மாறியது. ஜெய்ஸ்வாலும், ருதுராஜ் கெய்க்வாட்டும் ரன்களை துரிதமாக சேர்க்கத் தொடங்கினர். இதனால், மைதானத்தில் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறக்கத் தொடங்கியது. ஆனால், கிரெக் யங் வீசிய 7வது ஓவரில் அதிரடிக்கு மாறிய ஜெய்ஸ்வால் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாக, ஒன் டவுன் வீரராக களமிறங்கிய திலக் வர்மா முதல் பந்திலே அவுட்டானார். இதனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.



குறுக்கிட்ட மழை - இந்தியா வெற்றி பெறுமா?


சஞ்சு சாம்சன் – ருதுராஜ் ஜோடி சேர்ந்த நிலையில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் தற்காலிகமாக தற்போது நிறுத்தப்பட்டது. அப்போது,  இந்திய அணி 6.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் மீண்டும் போட்டியை தொடங்கும் சூழலே உருவாகவில்லை. இதன் காரணமாக போட்டியை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.


இந்திய அணி வெற்றி:


அப்போது டக்வொர்த் லீவிசுக்கு  இந்திய அணி எடுக்க வேண்டிய ரன்ரேட் விகிதத்தை காட்டிலும் 2 ரன்கள் கூடுதலாக சேர்த்து இருந்தது. இதனால், இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 4 ஓவர்களை வீசி 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, முதல் ஓவரிலேயே  2 விக்கெட்டுகளை வீழ்த்திய கேப்டன் பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து, நாளை இரு அணிகள் மோது இரண்டாவது டி-20 போட்டி நடைபெற உள்ளது.