கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய திருவிழாவாக  கருதப்படுவது 50 ஓவர் உலகக்கோப்பை தொடரே ஆகும். 2011ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடர் என்பதால் நடப்பு உலகக்கோப்பை தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த உலகக்கோப்பை தொடரே ரோகித்சர்மா, விராட்கோலிக்கு கடைசி உலகக்கோப்பை தொடராக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.


ஹர்திக் பாண்ட்யா ஃபார்ம்:


அனைத்து அணிகளும் உலகக்கோப்பையை குறிவைத்து தயார் ஆகி வரும் நிலையில், இந்திய அணியும் அதையே குறி வைத்துள்ளது. ஆனால், இந்திய அணியில் பல்வேறு குறைகளும், பின்னடைவுகளும் நிரம்பியிருக்கிறது என்பதே உண்மை. விராட்கோலி. ரோகித்சர்மா, ஜடேஜா ஆகியோர் தவிர மிகப்பெரிய நம்பிக்கையளிக்கும் வீரர்கள் என்று யாரையும் தற்போது கருத இயலவில்லை. ( பும்ரா தற்போதுதான் காயத்தில் இருந்து மீண்டுவந்துள்ளார்)




குறிப்பாக, இந்திய அணியின் அடுத்த கேப்டன் என்று வர்ணிக்கப்படும் ஹர்திக் பாண்ட்யா வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கேப்டனாகவும், வீரராகவும் சொதப்பியது ரசிகர்களுக்கும், நிர்வாகத்திற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இளம்பட்டாளத்தை கொண்டு இந்திய அணியை ஏற்கனவே வழிநடத்திய அனுபவமும், திறமையும் கொண்ட ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்ததே அதற்கு காரணம் ஆகும்.


வெ.இண்டீசில் ஜொலிப்பாரா?


மேலும், வரும் உலகக்கோப்பையில் மிடில் ஆர்டரில் முக்கிய பங்கு வகிக்கும் ஆல்ரவுண்டரான ஹர்திக்கின் பேட்டிங் ஒருநாள் போட்டிகளில் மோசமாக இருப்பதை அவரே ஒப்புக்கொண்டார். இதனால், அவருக்கு பதிலாக கேப்டன்சியில் சிறப்பாக செயல்படும் பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகிய நிலையில், ஆசிய கோப்பைத் தொடருக்கு ஹர்திக் பாண்ட்யாவே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.




விராட்கோலி, ரோகித்சர்மா போல மூன்று வடிவ போட்டிகளுக்கும் தலைமை தாங்கும் அளவிற்கு ஹர்திக்பாண்ட்யா வரவில்லை என்றாலும் அவர் அந்தளவு தன்னை வளர்த்துக் கொள்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதுள்ள சூழலில் அவர் ஒருநாள் போட்டியில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் தன்னை மெருகேற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தில் உள்ளார்.


கம்பேக் தருவாரா?


இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள ஆசியகோப்பை தொடரில் தன்னை நிரூபித்து, உலகக்கோப்பைத் தொடருக்கு தான் தயாராக இருப்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஹர்திக் பாண்ட்யா உள்ளார். அவரது ஆல்ரவுண்டர் திறமையும் இந்திய அணிக்கு அவசியமாக தேவைப்படுகிறது. நடைபெற உள்ள ஆசிய கோப்பைத் தொடரில் ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யா ஜொலிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


மேலும் படிக்க:  Chess World Cup: செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா… முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்திப் பதிவு!


மேலும் படிக்க: FIFA WWC 2023: "உதட்டில் முத்தம் கொடுத்தது தப்புதான்.. மன்னிச்சுடுங்க.." - வீராங்கனையை லிப்லாக் செய்த லூயிஸ் ரூபியேல்ஸ்..!