உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில், அரையிறுதி ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது வீரர் பிரக்ஞானந்தா வென்று இறுதிப்போட்டியை அடைந்தார். அவரை வாழ்த்தும் விதமாக தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.


டைபிரேக்கருக்கு சென்ற அரையிறுதி


நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கறுப்புக் காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 78வது நகர்த்தலில் டிரா செய்தார். இந்நிலையில் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டன. அரையிறுதிச் சுற்றின் 2வது ஆட்டத்தில், வெள்ளை காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 47வது காய் நகர்த்தலின் போது டிரா செய்தார். இரண்டு ஆட்டங்களும் டிராவில் முடிவடைந்த நிலையில், டை பிரேக்கர் மூலம் வெற்றியாளர் முடிவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. டைபிரேக்கரில் டைமர் வைத்து வேகமாக காய்நகர்த்த வேண்டும். அதில் மொத்தம் 4 ஆட்டங்கள் நடைபெறும். 4 டை பிரேக்கர்களின் முடிவில் உலகின் 2-ம் நிலை வீரரான ஃபேபியானோ கருவானாவுடனான அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: Mumbai Indians: முழுவதும் மும்பை இந்தியன்ஸ்.. ஆசியக் கோப்பை அணியில் ஆதிக்கம் செலுத்தும் ரோஹித் படை.. 8 வீரர்களுக்கு இடமா?


இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா


நடந்த ஆட்டங்களில் முதல் 2 ஆட்டங்கள் டிரா ஆனது. 3வது ஆட்டத்தில் கறுப்பு காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா, 63வது நகர்த்தலில் சாதுர்யமாக எதிரணி வீரர் ஃபேபியானோ கருவானாவை தோற்கடித்து முன்னிலை பெற்றார். கடைசி ஆட்டத்தில் ஃபேபியானோ வென்றால் ஆட்டம் மீண்டும் டிரா ஆகி இருக்கும். ஆனால் டிரா செய்தால் கூட பிரக்ஞானந்தா வென்று விடலாம் என்ற நிலையில், ஆட்டம் டிரா ஆனது. பிரக்ஞானந்தா 3½-2½ என்ற கணக்கில் ஃபேபியானோவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இதன் மூலம், 20 ஆண்டுகளுக்குப் பிறகு செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதோடு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்.






விளையாட்டுத்துறை அமைச்சர் வாழ்த்து


இந்த நிலையில் அவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவரது பதிவில்,"செஸ் உலகக்கோப்பை இறுதிப் போட்டியை எட்டியதற்காக தமிழ்நாட்டின் இளம் செஸ் ஸ்டார் பிரக்ஞானந்தாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த அபார சாதனையால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் பெருமிதம் கொள்கிறது. இறுதிப்போட்டியில் மைல்கல் வெற்றியைப் பதிவுசெய்ய வாழ்த்துகிறோம்," என்று எழுதியுள்ளார். 






முதலமைச்சர் வாழ்த்துப் பதிவு


அவரது பதிவை குவோட் செய்து பதிவிட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், "செஸ் உலகக்கோப்பையில் உங்கள் அபாரமான செயல்திறனுக்காக மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரக்ஞானந்தா! இறுதிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருப்பதற்கும் எனது வாழ்த்துக்கள். மிளிருங்கள்!" என்று பதிவிட்டுள்ளார். இந்த செஸ் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. மற்றொரு அரையிறுதியில் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், அஜர்பைஜானின் நிஜாத் அபாசோவை எதிர்கொண்டார். 43வது காய் நகர்த்தலில் கார்ல்சன் வெற்றி பெற்று முழு புள்ளியும் பெற்ற நிலையில், நேற்று நடந்த 2வது போட்டியை கார்ல்சன் டிரா செய்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.