மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப்போட்டியில் இங்கிலாந்து – ஸ்பெயின் மோதின. இந்த போட்டியில் ஸ்பெயின் கேப்டன் ஓல்கா அடித்த அற்புதமான கோலால் ஸ்பெயின் அணி சாம்பியன் என்ற மகுடத்தை சூடியது.
வெற்றிக் கொண்டாட்டத்தில் ஸ்பெயின் ரசிகர்கள் உள்ள நிலையில், பரிசளிப்பு விழாவில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருவர் சந்திப்பின்போது கன்னத்துடன் கன்னம் வைத்து முத்தம் கொடுத்துக் கொள்வது என்பது இயல்பு.
வீராங்கனைக்கு முத்தம்:
சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பிறகு ஸ்பெயின் வீராங்கனைகளுக்கு ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் மிகவும் உற்சாகமாக மகிழ்ச்சியுடன் பொன்னாடைகளை போர்த்தினார். மேலும், வீராங்கனைகளை கட்டியணைத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
அப்போது, ஸ்பெயின் வீராங்கனை ஜென்னி ஹெர்மோசோவை கட்டியணைத்து உதட்டில் முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தால் லூயிஸ் ரூபியேல்சுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில், தன்னுடைய செயலுக்காக லூயிஸ் ரூபியேல்ஸ் மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, “நான் கண்டிப்பாக தவறு செய்துவிட்டேன். இதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். இது பரஸ்பர ஒரு சைகை. முற்றிலும் யதேச்சையானதே. உலகக்கோப்பையை வென்ற மகிழ்ச்சியாலே அவ்வாறு நடந்தது.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
போட்டியில் ஸ்பெயின் முன்னிலை பெற்றது முதலே லூயிஸ் மிகவும் உற்சாகமாகவே காணப்பட்டார். போட்டியின்போது எதிரணி ரசிகர்களை வெறுப்பேற்றும் விதமாக சில ஆபாசமான சைகைகளிலும் அவர் ஈடுபட்டார். தற்போது அந்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக லூயிஸ் ரூபியேல்ஸ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஸ்பெயின் நாட்டின் துணை அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் வீராங்கனை ஜென்னிக்குமே மிகவும் அதிர்ச்சிகரமாக அமைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சர்ச்சைகளுக்கு நடுவிலும் உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்து வருவதுடன், அந்த நாட்டினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.