கிரிக்கெட் போட்டிகளில் சில அணிகள் மோதிக்கொண்டால் மட்டும் எப்போதும் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். அந்த வரிசையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி என்றால் உச்சகட்ட பரபரப்பு தொற்றிக்கொள்ளும். அடுத்த 2 மாதத்திற்கு இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் அடிக்கடி அரங்கேறப்போவது ரசிகர்களுக்கு படு குஷியை ஏற்படுத்தியுள்ளது.


ஆசிய கோப்பை, உலகக்கோப்பை என மிகப்பெரிய தொடர்களில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்த சூழலில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 இந்திய வீரர்கள் யார் என்பதை கீழே காணலாம்.



  1. யுவராஜ் சிங்:


பாகிஸ்தான் அணிக்கு எதிராக எப்போதும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர் யுவராஜ்சிங். இவர் இந்த பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மட்டும் 38 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 1360 ரன்கள் எடுத்துள்ளார். இதில்  1 சதமும், 12 அரைசதங்களும் அடங்கும். பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது பேட்டிங் சராசரியாக 42.50 வைத்துள்ளார்.



  1. சவ்ரவ் கங்குலி:


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி என்றாலே பாகிஸ்தான் அணிக்கு கிலி ஏற்பட்டு விடும். இவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 53 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1652 ரன்கள் விளாசியுள்ளார்.  பாகிஸ்தான் அணிக்கு எதிராக அசத்தலான 2 சதங்கள், 9 அரைசதங்களை விளாசியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான அவரது சராசரி 35.14 ஆகும்.



  1. முகமது அசாருதின்:


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதின் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் இதுவரை 64 ஒருநாள் போட்டிகள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆடி 1657 ரன்கள் விளாசியுள்ளார். அவர் 2 சதங்களும், 9 அரைசதங்களும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளாசியுள்ளார். இந்த பட்டியலில் அவர் 3வது இடத்தில் உள்ளார்.


    2.ராகுல் டிராவிட்:


இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மட்டும் 58 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2 சதங்கள், 14 அரைசதங்கள் உள்பட 1899 ரன்களை விளாசியுள்ளார். அவரது பேட்டிங் சராசரி 36.51 ஆகும்.


   1.சச்சின் டெண்டுல்கர்:


பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் எந்த சந்தேகமும் இல்லாமல் கிரிக்கெட் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரே முதலிடத்தில் உள்ளார். அவர் 69 ஒருநாள் போட்டிகள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆடி 2 ஆயிரத்து 526 ரன்கள் விளாசியுள்ளார். அதில் 5 சதங்களும், 16 அரைசதங்களும் அடங்கும். 40.09 ரன்கள் சராசரியாக வைத்துள்ள அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது அதிகபட்சமாக 141 ரன்களை விளாசியுள்ளார்.