இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் ஆட்டம் டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கியது. அந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் முல்தானில் நேற்று தொடங்கியது.
இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 51.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 281 ரன்களில் சுருண்டது.
டக்கெட் 63 ரன்களையும் விக்கெட் கீப்பர் ஒல்லி போப் அதிகபட்சமாக 60 ரன்களையும் எடுத்தார்.
கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 30 ரன்களில் நடையைக் கட்டினார்.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார் அப்ரார் அகமது.
அறிமுக வீரர்
பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த அப்ரார் அகமது இன்றைய ஆட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அவர் பாகிஸ்தானின் 252ஆவது வீரராக அறிமுகமானார். மிகச் சிறப்பாக சுழற்பந்து வீசும் திறமைப் படைத்த அவர், இந்த ஆட்டத்தின் முதல் விக்கெட்டை 9ஆவது ஓவரில் வீழ்த்தினார்.
அவர் வீசிய சுழற்பந்து ஸ்டெம்ப்பை பதம் பார்த்தது. இந்தப் பந்தை சற்றும் எதிர்பாராத ஜக் கிராவ்லி 19 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து, இங்கிலாந்தின் வீரர்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து ஒட்டுமொத்த பாகிஸ்தான் வீரர்களையும், ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். கேப்டன் பென் ஸ்டோக்சையும் போல்டாக்கினார் அப்ரார் அகமது. இவ்வாறாக 7 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார் அப்ரார் அகமது.
எஞ்சிய மூன்று விக்கெட்டுகளை ஜஹித் முகமது வீழ்த்தினார்.
மார்க் வுட் மட்டும் கடைசி வரை ஆட்டமிழ்ககாமல் 36 ரன்களுடன் களத்தில் நின்றார். இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 281 ரன்களை எடுத்தது. அப்ரார் அகமது 22 ஓவர்களை வீசி 1 மெய்டன் ஓவரையும் 114 ரன்களையும் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து, பாகிஸ்தான் அணி களமிறங்கி முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.