இங்கிலாந்து கிரிக்கெட் அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பென்ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.


இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முல்தான் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டிற்கு கிரிக்கெட் விளையாடச் சென்றுள்ள இங்கிலாந்து அணி தங்கியுள்ள ஹோட்டலுக்கு அருகில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




இந்த சம்பவம் தொடர்பாக, பாகிஸ்தான் நாட்டின் காவல்துறை 4 பேரை கைது செய்துள்ளது. டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி புறப்படுவதற்கு முன்பாக இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டிற்கு கிரிக்கெட் விளையாடச் செல்ல வெளிநாட்டு அணிகள் தயக்கம் காட்டி வரும் நிலையில், 17 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து அணிக்கு உச்சபட்ச பாதுகாப்பு பாகிஸ்தான் அரசால் அளிக்கப்பட்டுள்ளது.


இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், இங்கிலாந்து அணியினர் தங்கியிருந்த ஹோட்டல் அருகே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


பாகிஸ்தான் நாட்டில் 2009ம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூரில் டெஸ்ட் போட்டி ஆடிக்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் கிரிக்கெட் உலகையே அதிரவைத்தது. அப்போது முதல் பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று கிரிக்கெட் விளையாட வெளிநாட்டு அணிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.




இந்த நிலையில், சமீப காலமாகதான் வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தான் நாட்டிற்கு வந்து கிரிக்கெட் ஆடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முல்தான் நகரில் தற்போது நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது. அந்த அணி உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 14 ரன்களுடனும், வில் ஜேக்ஸ் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.


பென் டக்கட் 63 ரன்களும், ஒல்லி போப் 60 ரன்களும் எடுத்தனர். ஜோ ரூட் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணியின் அறிமுக பந்துவீச்சாளர் அப்ரர் அகமது சுழலில் தற்போது வரை விழுந்த 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.