உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள், நாக் அவுட் ஆட்டங்கள் நிறைவு பெற்று தற்போது உலகக்கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பான நிலைக்கு சென்றுள்ளது. தொடரின் முக்கிய பகுதியான காலிறுதி இன்று தொடங்குகிறது.


இதன்படி, இன்று நடைபெறும் முதல் காலிறுதிப் போட்டியில் குரோஷியா – பிரேசில் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. கத்தாரில் உள்ள எஷிகேஷன் சிட்டி மைதானத்தில் இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ளது.


குரோஷியா - பிரேசில் மோதல்:


இந்த போட்டியை பொறுத்தவரையில் குரோஷியா அணியை காட்டிலும் பிரேசில் அணி பலம்வாய்ந்த அணியாக திகழ்கிறது. ஆனால், சமீபகாலமாக குரோஷியா அணி மிகவும் சிறப்பாக ஆடி வருகிறது. இந்த தொடரைப் பொறுத்தமட்டில், குரோஷியா அணி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஒரு வெற்றி, இரண்டு டிராக்களுடன் குழு ஆட்டங்களில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய குரோஷியா, நாக் அவுட் போட்டியில் ஜப்பான் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.


உலகளவில் நம்பர் 1 அணியாக வலம் வரும் பிரேசில் அணியை கேமரூன் அணி குட்டி அணியான கேமரூனிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. பின்னர், அடுத்தடுத்த ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. பிரேசில் அணியை பொறுத்த வரை நெய்மர், ரிச்சர்லிசன், வின்சியஸ் ஜூனியர், தியாகோ சில்வா மற்றும் மார்க்யூன்ஹோஸ் ஆகியோர் முக்கிய வீரர்களாக உள்ளனர்.


அரையிறுதிக்கு செல்லப்போவது யார்..?


பிரேசில் அணியை வீழ்த்த வேண்டுமென்றால் குரோஷியா அணி தனது முழு பலத்துடன் ஆட வேண்டியது கட்டாயம். குரோஷிய அணி கடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இறுதிப்போட்டி வரை சென்ற பெருமைக்குரிய அணியாகும். அதனால், குரோஷியாவின் பலத்தை பிரேசில் அணி குறைத்து மதிப்பிட முடியாது.


குரோஷியா அணியும், பிரேசில் அணியும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் 3 முறை பிரேசில் அணியும், ஒரு போட்டி டிராவிலும் முடிந்துள்ளது. உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதிய 2 போட்டியிலும் பிரேசில் அணியே வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்கு செல்லும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக தீவிரமாக போராடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


குரோஷியா வந்தது எப்படி…?


குரூப் எஃப் பிரிவில் இடம்பெற்ற குரோஷியா,  மொரோக்கா மற்றும் பெல்ஜியம் உடனான ஆட்டத்தை டிரா செய்தது. கனடாவிற்கு எதிராக 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 5 புள்ளிகளுடன் 2வது சுற்றுக்கு முன்னேறியது. 2வது சுற்றில் ஜப்பானை 3-1 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.


பிரேசில் எப்படி வந்தது?


குரூப் ஜியில் செர்பியாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி, சுவிட்சர்லாந்தை 1-0 என்ற கணக்கிலும் வீழ்த்திய பிரேசில் கேமரூனிடம் 1-0 என்ற கணக்கில் தோற்றது. பின்னர், நாக் அவுட் சுற்றில் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.