இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டாம் கரன் தனது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து காலவரையற்ற ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார்.


டெஸ்ட் போட்டிகளில் இருந்து தற்காலிக ஓய்வு


27 வயதான டாம் கரன், சமீபத்திய ஆண்டுகளில் பல காயங்களால் அவதிப்பட்டு வருகிறார், மேலும் அவர் ஒயிட்-பால் கிரிக்கெட்டிற்காக தனது உடலை வலுவாக வைத்திருக்க முயற்சிப்பதால் பணிச்சுமையை குறைக்க முயல்கிறார். இங்கிலாந்து அணிக்காக மட்டுமின்றி, டாம் கரன் டி20 போட்டிகளில் ஃப்ராஞ்சைஸ் அணிகளான வைட்டலிட்டி பிளாஸ்டில் சர்ரேயை அணிக்காகவும், தி ஹன்ரரெட்டில் ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணிக்காகவும் விளையாடி உள்ளார்.


அவர் இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும், ஆஸ்திரேலிய பிக் பாஷ் லீக்கில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டாம் கரன் சமீபத்தில் ILT20 இல் டெசர்ட் வைப்பர்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். விரைவில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இஸ்லாமாபாத் யுனைடெட் உடன் இணைவார் என்று தெரிகிறது. இப்படி பல நாடுகளின் டி20 லீக் போட்டிகளிலும் விளையாடுவதால் உடலையும், மனதையும் போதுமான திடத்துடன் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக டெஸ்ட் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருக்க முடிவெடுத்துள்ளார். ஆல்-ரவுண்டரான அவர் மீண்டும் நேரம் வரும்போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவேன் என்றும், அது குறித்த சிந்தனை இப்போது இல்லை என்றும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.



இலகுவாக எடுத்த முடிவு அல்ல


2022 இல் அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்தபோது, சர்ரே அணிக்காக கரன் விளையாடிய போது ரெட்-பால் கிரிக்கெட்டில் அந்த அளவுக்கு சிறந்த பங்களிப்பை தரவில்லை. ஆனால் அவர் நார்தாம்ப்டனுக்கு எதிராக வான்டேஜ் ரோட்டில் முதல் தர கிரிக்கெட்டில் வெறும் 85 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இவர் இப்போது எடுத்துள்ள முடிவால் ஆஸ்திரேலியாவுடனான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து ரசிகர்கள் டாம் கரனை பார்க்க முடியாது.


அவர் இதுகுறித்து பேசுகையில், "கடந்த இரண்டு வருடங்கள் எனக்கு எளிதானதாக இல்லை. எனக்கு நிறைய நேரம் கிடைத்தது, இது நான் இலகுவாக எடுத்த முடிவு அல்ல", என்று டாம் குர்ரன் தனது உள்நாட்டு கிளப் சர்ரே கவுண்டி கிரிக்கெட் கிளப் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தார். 


தொடர்புடைய செய்திகள்: Adani Explains: எனக்கு இதுதான் முக்கியம்..! பங்குகள் விற்பனையை நிறுத்தியது ஏன்? - மவுனம் கலைத்த அதானி


கண்டிப்பாக திரும்பி வருவேன்


மேலும், "வாழ்க்கையில் சில முடிவுகளில் எப்போதும் 100% உறுதியாக இருப்போம் என்று நான் நினைக்கவில்லை. இது நிச்சயமாக அதுபோன்ற ஒன்றுதான். ஆனால் இது எனது உடலுக்கும் எனது மன ஆரோக்கியத்திற்கும் சரியான முடிவு என்று நான் உணர்கிறேன். எதிர்காலத்தில் ரெட்-பால் கிரிக்கெட்டை மீண்டும் விளையாடுவதை நான் நிச்சயமாக நிராகரிக்க மாட்டேன். ஆனால் என் உடலில் 100% உறுதியுடனும் நம்பிக்கையுடனும் இருப்பதை உணரும் வரை விளையாடத் துவங்க மாட்டேன். கவுண்டி சாம்பியன்ஷிப்பில் சர்ரேக்காக நாள்தோறும் விளையாடி வருவதால், இந்த ஆண்டு எங்கள் வைட்டலிட்டி பிளாஸ்ட் தொடரில் எனது முழு நேரத்தையும் கவனம் செலுத்துவது சரியான விஷயம் என்று நான் உணர்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.



புரிந்துகொண்ட ஸ்டீவர்ட்க்கு நன்றி


"சர்ரே மற்றும் இங்கிலாந்து ரசிகர்களுக்கு இது நல்ல செய்தி அல்ல என்று எனக்குத் தெரியும். ஆனால் எனது முடிவை ஆதரித்ததற்காகவும் புரிந்துகொண்டதற்காகவும் அலெக் ஸ்டீவர்ட்டுக்கு உண்மையிலேயே மனமார்ந்த நன்றியைச் சொல்ல வேண்டும். அவர் செய்ததைப் போலவே அனைவரும் எனது முடிவைப் பார்த்து புரிந்துகொள்வார்கள் என்பது எனது நம்பிக்கை", டாம் கரன் கூறி இருந்தார்.


அலெக் ஸ்டீவர்ட் பேட்டி


"கவுண்டி சாம்பியன்ஷிப் அணியில் இருந்து டாம் கரன் போல தரம் வாய்ந்த ஒரு வீரரை நீங்கள் இழக்க நேரிடும் போது அது ஒரு பெரிய அடியாக இருக்கும், ஆனால் நான் அவரது முடிவைப் பற்றி அவரிடம் விரிவாகப் பேசினேன், அவர் ஏன் அதை எடுத்தார் என்பதைப் புரிந்துகொண்டேன். அவர் சமீபத்திய ஆண்டுகளில் காயங்களால் அவதிப்பட்டார். இந்த ஓய்வு அவரது உடலை வலுப்படுத்தவும், வரும் ஆண்டுகளில் அவரை தொடர்ந்து கிரிக்கெட் மைதானத்தில் தொடரவும் உதவும், இந்த முடிவை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். எங்கள் சொந்த டி20 சீசனுக்காக மே மாதத்தில் அவரை மீண்டும் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று கிரிக்கெட் இயக்குனர் அலெக் ஸ்டீவர்ட் கூறினார்.