ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. முன்னதாக 48 லீக் ஆட்டங்களை கொண்ட இந்த தொடரில் இதுவரை 6 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளது.


அந்தவகையில், இன்று (அக்டோபர் 10) ஒரே நாளில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணியும், மற்றொரு போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணியும் விளையாடி வருகிறது.


இதனிடையே, வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மலன் ஆகியோர் களமிறங்கினர்.


ருத்ர தாண்டவம் ஆடிய மலான்:


முன்னதாக, இவர்களது பார்ட்னர்ஷிப் 115 ரன்களை குவித்தது. அதன்படி 59 பந்துகளை சந்தித்த ஜானி பேர்ஸ்டோவ் 8 பவுண்டரிகள் அடித்து மொத்தம் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.


மறுபுறம் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் 14 ரன்கள் மட்டுமே எடுத்த டேவிட் மாலன், வங்கதேசத்திற்கு எதிரான இந்த போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடினார். வங்கதேச பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறக்க விட்டார். அதன்படி, 107 பந்துகள் களத்தில் நின்ற டேவிட் மலான் 16 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என மொத்தம் 140 ரன்களை குவித்தார். பின்னர், மகேதி ஹசன் பந்து வீச்சில் அவுட் ஆனார்.


அடுத்ததாக வந்த ஜோ ரூட்டும் அதிரடியாக விளையாடினார். அதன்படி அவர் 68 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 82  ரன்கள் எடுத்து ஷோரிஃபுல் இஸ்லாம் பந்துவீச்சில் முஷ்பிகுர் ரஹீமிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.


பின்னர் வந்த கேப்டன் ஜோஸ் பட்லர்  மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் தலா 20 ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு மொத்தம் 327 ரன்கள் எடுத்திருந்தது.  அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி மொத்தம் 364 ரன்கள் எடுத்தது.


365 டார்கெட்



வங்கதேச அணி 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. அதன்படி வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் தன்சித் ஹசன் ஆகியோர் களமிறங்கினர். அதில், தன்சித் ஹசன்  1 ரன்னில் ஆட்டமிழக்க மறுபுறம் லிட்டன் தாஸ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார்.  அதன்படி  66 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 


அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டுகள்:


பின்னர் களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் சாண்டோ, வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் ,மெஹிதி ஹசன் மிராஸ் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வங்கதேச அணி திணறியது.  பின்னர் வந்த முஷ்பிகுர் ரஹீம் மற்றும் டவ்ஹித் ஹ்ரிடோய் ஓரளவு நம்மிக்கை அளித்தனர்.  அதில்  முஷ்பிகுர் ரஹீம்  51 ரன்களும், டவ்ஹித் ஹ்ரிடோய் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.


இவ்வாறாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணி 227 ரன்கள் மட்டுமே எடுத்து இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது.


மேலும் படிக்க: Shubman Gill: மருத்துவமனையில் இருந்து சுப்மன் கில் டிஸ்சார்ஜ்.. சரிந்த பிளேட் செல்ஸ் - பாகிஸ்தான் போட்டியில் மாற்று வீரர்?


 


மேலும் படிக்க: Sri Lanka vs Pakistan LIVE: பேட்டிங்கில் மிரட்டி விட்ட இலங்கை; பாகிஸ்தானுக்கு 345 ரன்கள் இலக்கு..!