ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024:


கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 8 சுற்றி நடைபெறுகிறது. நேற்று (ஜூன் 22) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின. இந்த போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக அமைந்துள்ளது. 


முன்னதாக வங்கதேச அணியை தொடர்ந்து விமர்சித்து வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் மீண்டும் சீண்டி உள்ளார். ஏற்கனவே வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசனை சேவாக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த ஹசன் அண்மையில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் சேவாக் என்றால் யார் என்று கேட்டார். இப்படி தொடர்ந்து வங்கதேச அணிக்கும் சேவாக்கிற்கு இடையே வார்த்தைப் போர் நிலவிவருகிறது. 


வங்கதேச அணியை விமர்சித்த சேவாக்:


இந்நிலையில் சேவாக் வங்கதேச அணிக்கு தேவையில்லாத பில்டப்பை எல்லோரும் கொடுக்கின்றனர் என்று  கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் வங்கதேசம் அணி நமது நாளை பாழாக்கி விட்டார்கள். நேற்றைய போட்டி நீண்ட நேரம் நடைபெற்றது போல் எனக்கு தெரிந்தது. இதுவே வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்திருந்தால் அவர்கள் குறைவான இலக்கையே அடித்து இருப்பார்கள். அதனை இந்தியா மிக எளிதாக துரத்தி வெற்றி பெற்றிருக்கும்.


நாம் அனைவரும் விரைவாக வீட்டிற்கு சென்று கொண்டிருப்போம். ஆனால் இது வெறும் வங்கதேச அணி தான். அவர்களுக்கு ஏன் தேவையில்லாத பில்டப்பை அனைவரும் தருகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை” என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “இந்தியா போன்ற பெரிய அணிக்கு எதிராக விளையாடுகிறார். அவருக்கு துணையாக ஒரு நல்ல வீரர் களத்தில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் 15 அல்லது 16 வது ஓவர் வரை ஷாகிப் அல் ஹசன் பொறுமையாக விளையாடி களத்தில் நின்று இருக்க வேண்டும். ஆனால் ஷாகிப் அல் ஹசன் எனக்கு எப்போதுமே ஒரு பெரிய ஏமாற்றமாக தான் இருக்கின்றார். அவருக்கு அவ்வளவு பெரிய அனுபவம் இருக்கின்றது. ஆனால் அதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்வது கிடையாது” என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க: AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!


மேலும் படிக்க: IND vs BAN Match Highlights: குல்தீப் யாதவ் மாயாஜால பந்து வீச்சு.. வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி!