டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 


ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டி கடந்த ஜூன் 2 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள்  ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் லீக் போட்டிகள் நிறைவு பெற்று குரூப் ஏ-வில் இருந்து இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் குரூப் 8 சுற்றுக்குள் நுழைந்தது. 


தற்போது குரூப் 8 போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் 48வது போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியானது செயிண்ட் வின்சென்ட் நகரில் உள்ள அர்னாஸ் வாலே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. 


இதனைத்  தொடர்ந்து பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் 60 ரன்களும், இப்ராகிம் சார்டான் 51 ரன்களும் விளாசினர். ஆனால் மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. அனைத்து வீரர்களும் அடித்து ஆட தவறியதால் 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், ஆடம் ஸம்பா 2 விக்கெட்டுகளும், மார்கஸ் ஸ்டோனிஸ் ஒரு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதில் கம்மின்ஸ் எடுத்த 3 விக்கெட்டுகளும் ஹாட்ரிக் விக்கெட்டுகள் ஆகும். 


தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 20 ஓவர்கள் தாக்குப்பிடித்தாலும் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 


ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அதிகப்பட்சமாக குல்பதீன் நைப் 4 விக்கெட்டுகளும், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதேசமயம் ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகப்பட்சமாக மேக்ஸ்வெல் மட்டும் 59 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆல் அவுட் ஆனார்.