ஆஸ்திரேலிய அணி:
பாகிஸ்தானுக்கு எதிராக சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியிடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற டேவிட் வார்னர், தற்போது பிக் பாஷ் லீக் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் விளையாடுவதற்காக ஹெலிகாப்டரில் பறந்து வந்து மைதானத்திலேயே தரையிறங்கியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை ஒயிட்வாஷ் செய்தது. இதில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 57 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார்.
முன்னதாக, இதுவரையில் 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர் 8,786 ரன்கள் குவித்துள்ளார். இதில், 26 சதங்கள், 37 அரைசதங்கள் அடங்கும். மேலும், 3 இரட்டை சதங்களும் அடித்துள்ளார். இந்த போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற வார்னருக்கு பாகிஸ்தான் வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்சியை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
அதுமட்டுமின்றி ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மைதானத்திற்குள் வந்து வார்னருக்கு சிறப்பு மரியாதை செய்தனர். இதனிடையே, டெஸ்ட் கிரிக்கெட்டை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியில் இடம் பெற்றார். இந்நிலையில், இன்று நடக்கும் 34-வது போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் மோதுகின்றன.
இதில் டேவிட் வார்னர் விளையாட இருக்கிறார். இந்தப் போட்டியானது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக வார்னர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியுள்ளார். ஹண்டர் பள்ளத்தாக்கில் தனது சகோதரரின் திருமணத்திற்கு சென்றிருந்த நிலையில் அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் மைதானத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சமுக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Team India T20 Squad: விராட் கோலியின் நரம்புகள் முழுவதும் கிரிக்கெட்தான்... டி20 அணிக்கு திரும்பியதற்காக புகழ்ந்த டி வில்லியர்ஸ்..!
மேலும் படிக்க: IND vs AFG T20I: அரை சதம் விளாசிய ஷிபம் துபே... 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!