விறுவிறுப்புடன் உலகக் கோப்பை தொடர் மூன்று வாரங்களை கடந்து நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல விதமான சாதனைகளையும் வீரர்கள் செய்து வருகின்றனர்.


அதேபோல் மோசமான சாதனைகளையும் சில வீரர்கள் படைத்து வருகின்றனர். அதன்படி, இன்றைய போட்டியிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.


48 லீக் ஆட்டங்களை கொண்ட இந்த உலகக் கோப்பை தொடரில் 29-வது லீக் போட்டி இன்று (அக்டோபர் 29) நடைபெற்று வருகிறது. லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.


தோல்வியே பெறாத அணி:



இதில் நடைபெற்று முடிந்த 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று தோல்வியே பெறாத அணி என்ற அடிப்படையில் இந்திய அணியும், தாங்கள் விளையாடிய 5 போட்டிகளில் 4 தோல்விகளை சந்தித்து 1 வெற்றி மட்டுமே பெற்ற இங்கிலாந்து அணியும் மோதுவதால் இன்றைய போட்டியிலும் இந்தியாவின் ஆதிக்கம்  இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிகழ்கிறது.


அதன்படி, டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். இதில் 13 பந்துகள் களத்தில் நின்ற சுப்மன் கில் 9 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.


எதிர்பார்ப்புடன் களமிறங்கிய விராட் கோலி:


இன்றைய போட்டியில் ஒரு சதம் அடித்தால் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுகல்கரின் சாதனையை (49 சதங்கள்) சமன் செய்வார் என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கினார் விராட் கோலி.


இதில் 9 பந்துகள் களத்தில் நின்ற விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.  இதுவரை விராட் கோலி விளையாடிய உலகக் கோப்பை தொடரில் இது தான் அவர் டக் அவுட் ஆவது முதல் முறை. 


எப்படி டக் அவுட் ஆனார்?


இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் டேவிட் வில்லி 7-வது ஓவரை வீசினார். அதில் 4 பந்துகள் வரை ரன் எடுக்காமல் கோலி களத்தில் நின்றார். அப்போது 5-வது பந்தை வீசினார் டேவிட் வில்லி அதை தூக்கி அடித்தார் விராட் கோலி, அந்த பந்து பென் ஸ்டோக்ஸ் கையில் சிக்கியது.


இவ்வாறாக மொத்தம் 9 பந்துகள் களத்தில் நின்று ரன் எடுக்காமல் டக் அவுட் முறையில் கோலி பெவிலியின் திரும்பியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.


முன்னதாக, விராட் கோலி 2023 ஐசிசி உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறார்.  இன்றைய போட்டியை தவிர்த்து அவர் விளையாடிய 5 போட்டிகளில் மொத்தம் 354 ரன்கள் குவித்துள்ளர்.


அதேபோல், 118- என்ற சராசரியுடன் 90.53 என்ற ஸ்ட்ரைக் ரேட்டையும் வைத்துள்ளார். மேலும், ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்களையும் அவர் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் படிக்க: IND Vs ENG World Cup 2023: புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்குமா இந்தியா? இங்கிலாந்து உடன் இன்று பலப்பரீட்சை


 


மேலும் படிக்க: IND vs ENG LIVE Score: அதிர்ச்சியில் இந்தியா; சுப்மன் கில், விராட் கோலி சொதப்பல்; பந்து வீச்சில் மிரட்டி வரும் இங்கிலாந்து