IND Vs ENG World Cup 2023: லக்னோவில் இன்று நடைபெறும் உலகக் கோப்பையின் 29வது லீக் போட்டியில், இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி தொடர்ந்து 6வது வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


உலகக் கோப்பை:


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் தற்போது வரை 28 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் தென்னாப்பிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே முதல் 4 இடங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில், இன்று நடைபெறும் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள இந்தியா, கடைசி இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.


இந்தியா - இங்கிலாந்து மோதல்:


லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.  இதுவரை விளையாடிய முதல் 5 லீக் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியையே சந்திக்காமல், தொடர் வெற்றிகளை பதிவு செய்துள்ளது.  மறுமுனையில் 5 போட்டிகளில் விளையாடி 4 தோல்விகளுடன் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால், தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இங்கிலாந்தும், தோல்வியையே சந்திக்காத இந்திய அணி  புள்ளிப்பட்டியல்ல் மீண்டும் முதலிடம் பிடிக்கவும் இன்று மல்லுக்கட்ட உள்ளன.


பலம் & பலவீனங்கள்:


உள்ளூரில் நடைபெறுகிறது என்ற கூடுதல் பலத்துடன் நடப்பு உலகக் கோப்பையில், இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி ஷமி, பவுலிங் யூனிட்டை மேலும் வலுவானதாக மாற்றியுள்ளார். பீல்டிங்கில் மட்டும் இந்திய அணி மேலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மறுமுனையில் இங்கிலாந்து அணியில் ஆகச்சிறந்த வீரர்கள் இருப்பினும், தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ளனர். எனவே மோசமான நினைவுகளை மறந்து, புத்துணர்ச்சியுடன் இன்று களமிறங்கினால் மட்டுமே வெற்றிக்காக போராட முடியும். அதேநேரம், இன்றைய போட்டி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான லக்னோ மைதானத்தில் நடைபெறுவது, இங்கிலாந்து அணிக்கு சிக்கலாக அமைந்துள்ளது.


நேருக்கு நேர்:


சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 106 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 57 முறையும், இங்கிலாந்து அணி 44 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகள் டிராவில் முடிய, 3 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.


மைதானம் எப்படி?


லக்னோவில் உள்ள ஏகனா கிரிக்கெட் மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதாகவே அமைந்து வருகிறது. வேகப்பந்து வீச்சாளர்களை விட சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த மைதானத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். எனவே, பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடினால் மட்டுமே ரன்களை சேர்க்க முடியும். டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வை செய்வது சாதகமாக அமையலாம்.


உத்தேச அணி விவரங்கள்:


இந்தியா: 
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மற்றும் முகமது ஷமி


இங்கிலாந்து:
ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ( கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, டேவிட் வில்லி, அடில் ரஷித், மார்க் வூட் மற்றும் கஸ் அட்கின்சன்