உலகம் முழுவதும் தங்கம் மட்டுமின்றி அரிய வகை பொருட்கள், அரிய வகை விலங்குகளை சட்ட விரோதமாக பலரும் கடத்தி வருகின்றனர். இதைத்தடுக்க அந்தந்த நாட்டு சுங்கத்துறையினர், அதிகாரிகள் முழு மூச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
அதிர வைத்த கடத்தல்:
பெரும்பாலும் உலகளவில் அரங்கேறும் கடத்தல் சம்பவங்கள் வான் வழியிலும், கடல் வழியிலும் அரங்கேறி வருகின்றது. இதைத்தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளும், கெடுபிடிகளும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சீனாவில் நடந்த கடத்தல் சம்பவம் சுங்கத்துறை அதிகாரிகளையே மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
சீனாவில் அமைந்துள்ளது குவாங்டாங் மாகாணம். இந்த மாகாணத்தில் அமைந்துள்ள ஃபூஷியன் மாவட்டம். இந்த மாவட்டத்தில் ஷென்ஜென் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வது வாடிக்கை ஆகும். இந்த நிலையில், கடந்த மாதம் 29-ந் தேதி பெண் பயணி ஒருவர் விமானத்தில் வந்துள்ளார். அப்போது, அந்த பெண் பயணி வழக்கத்திற்கு மாறாக இருந்துள்ளார்.
உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்ட பாம்பு:
குறிப்பாக, அந்த பெண் பயணியின் உடல் அமைப்பு மற்ற பெண்களை போல அல்லாமல் வழக்கத்திற்கு மாறாக இருந்துள்ளது. இதைக்கண்ட சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த பெண்ணை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அந்த பெண் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.
அந்த பெண்ணின் பதிலில் திருப்தி அடையாத அதிகாரிகள் பெண் அதிகாரிகளை கொண்டு அந்த பெண் பயணியை சோதனை நடத்தினர். அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்தது. அந்த பெண் தனது உள்ளாடையில் 5 பைகளை மறைத்து வைத்திருந்ததும், அந்த பைகள் அசைவுடன் காணப்பட்டும் இருந்துள்ளது.
அதிகாரிகள் அதிர்ச்சி:
உடனடியாக, அந்த பெண் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த பைகளை பறிமுதல் செய்து அதை திறந்து பார்த்தனர். அப்போது, ஒவ்வொரு பையிலும் பாம்பு உயிருடன் இருந்துள்ளது. மொத்தம் 5 பைகளில் 5 பாம்புகள் இருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 5 பாம்புகளுமே அரிய வகை பாம்புகள் ஆகும். மிக அரிய வகை பாம்புகளை ஆபத்தான முறையில் உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த பெண்ணை அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகளை வனத்துறை அதிகாரிகள் மூலம் அப்புறப்படுத்தினார். உயிருக்கு மிக ஆபத்தான முறையில் விஷத்தன்மை நிறைந்த அரிய வகை பாம்புகளை உள்ளாடையில் மறைத்து பெண் கடத்திய சம்பவம் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் மட்டுமின்றி அதிகாரிகளுக்குமே பேரதிர்ச்சியாகவே அமைந்தது.
மேலும் படிக்க: Accident: நள்ளிரவில் ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து: 11 பேர் பரிதாபமாக உயிரிழப்பு; 40 பேர் படுகாயம்..!
மேலும் படிக்க: கனடாவையே அதிரவைத்த வந்தே மாதரம் முழக்கம்.. காலிஸ்தானி பேரணிக்கு போட்டியாக நடத்தப்பட்ட இந்திய பேரணி