ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு வீரர் தனித்துவமான வீரராக உலா வருவார்கள். இன்றைய அதிநவீன கிரிக்கெட்டானது பந்துவீச்சாளர்களை காட்டிலும் பேட்ஸ்மேன்களுக்கே மிகவும் சாதகமானதாக உள்ளது. ஆனால், ஆரம்ப கால கிரிக்கெட் அதாவது ஒருநாள் உலகக்கோப்பை தொடங்கி அந்த 2000 காலகட்டங்கள் வரை பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாகவே கிரிக்கெட் போட்டிகள் விளங்கின.


ஜாம்பவான் கவாஸ்கர்:


குறிப்பாக,  1970, 80 காலகட்டங்களில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பேட்டிங் செய்வது என்பது மிக, மிக சவாலான காரியம் ஆகும். மைதானங்களும் இன்று இருப்பது போல இருக்காது. கரடுமுரடான அந்த மைதானங்களில் எதிரணிகளுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் சுனில் கவாஸ்கர்.


இன்று தன்னுடைய 74வது வயதில் அடியெடுத்து வைக்கும் கவாஸ்கர் 1971ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலே முதல் இன்னிங்சில் 65 ரன்களும், 2வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 67 ரன்களும் எடுத்து இந்திய அணியை அன்றைய உலகின் வீழ்த்த முடியாத அணியான வெஸ்ட் இண்டீசை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார்.


10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர்:


இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் பல வீரர்களும் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரராக இருந்தாலும், யாராலும் முடியாது என்று கருதிய காலத்திலே டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன் முதலில் 10 ஆயிரம் ரன்களை எட்டி சுனில் கவாஸ்கர் புதிய வரலாறு படைத்தார். இந்த சாதனையை அவர் 1987ம் ஆண்டு படைத்தார். உலகின் அபாயகரமான பந்துவீச்சாளர்களாக திகழ்ந்த மைக்கேல் ஹோல்டிங், ஆண்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர், ஜெஃப் தாம்ப்சன், டென்னிஸ் லில்லி ஆகிய மிரட்டல் பந்துவீச்சாளர்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.


34 சதங்கள்:


டெஸ்ட் கிரிக்கெட்டில் 1987ம் ஆண்டே ஓய்வு பெற்றுவிட்ட சுனில் கவாஸ்கர் அப்போதே டெஸ்ட் போட்டிகளில் 34 சதங்களை விளாசியிருந்தார். லிட்டில் மாஸ்டர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வந்த அவர் 125 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 214 இன்னிங்சில் பேட் செய்துள்ளார். அதில் அவர் 34 சதங்கள், 4 சதங்கள், 45 அரைசதங்களுடன் 10 ஆயிரத்து 122 ரன்களை எடுத்துள்ளார். இதுதவிர 108 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1 சதம், 27 அரைசதங்களுடன் 3 ஆயிரத்து 92 ரன்களை எடுத்துள்ளார்.  கவாஸ்கரின் சாதனை நீண்ட காலமாக முறியடிக்கப்படாமல் இருந்த நிலையில், 2005ம் ஆண்டு கவாஸ்கரின் சாதனையை சச்சின் டெண்டுல்கர் முறியடித்தார்.


வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆதிக்கம்:


கவாஸ்கர் ஆடிய காலத்தில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ரிச்சர்ட்ஸ், கிளைவ் லாயிட், கார்னர், மைக்கேல் ஹோல்டிங்,  மால்கோம் மார்ஷல் என்று ஜாம்பவான்கள் ஆடிய அணியாகும். குறிப்பாக, அந்த அணியின் பந்துவீச்சாளர்களை எதிர்த்து நின்று பேட்டிங் செய்வது மிக மிக கடினமாக இருந்தது. அப்பேற்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தன்னுடைய அறிமுக தொடரிலேயே 774 ரன்கள் விளாசியிருந்தார். இதுவரை வேறு எந்த வீரரும் தன்னுடைய அறிமுக டெஸ்ட் தொடரில் இவ்வளவு ரன்களை குவிக்கவில்லை. அவரது அபார பேட்டிங்காலே இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் முதன்முறையாக தொடரை வென்றது.


100 கேட்ச்கள் பிடித்த முதல் இந்திய அவுட்-ஃபீல்டர்:


விக்கெட் கீப்பர் அல்லாமல் ஃபீல்டராக டெஸ்ட் போட்டிகளில் 100 கேட்ச்கள் பிடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் கவாஸ்கர் தன்வசம் வைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக முதன்முறையாக 100 கேட்ச்கள் பிடித்த அவுட்ஃபீல்டர் என்ற சாதனையை படைத்துள்ள கவாஸ்கர், நெருக்கடியான நேரத்தில் பல அற்புதமான கேட்ச் பிடித்துள்ளார்.


 


ஆஸ்திரேலியாவில் 1984-85ம் ஆண்டில் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் நடைபெற்றது. இந்த தொடரில் கபில்தேவிற்கு பதில் சுனில் கவாஸ்கர் தலைமை தாங்கினார். அவரது தலைமையில் களமிறங்கிய இந்திய அணி பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளை லீக் போட்டிகளில் வீழ்த்தியும், அரையிறுதியில் நியூசிலாந்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் பரம வைரியான பாகிஸ்தானை மெல்போர்ன் மைதானத்தில் எதிர்கொண்ட இந்தியா பாகிஸ்தானை 176 ரன்களுக்கு சுருட்டியது. 50 ஓவர்களில் 177 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரவிசாஸ்திரி, ஸ்ரீகாந்த் அதிரடி தொடக்கம் அளித்ததில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பலமிகுந்த பல அணிகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி


இதுபோன்ற பல்வேறு சாதனைகளை படைத்துள்ள சுனில் கவாஸ்கர் சச்சின் டெண்டுல்கர் அறிமுகமாவதற்கு முன்பு, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக உலா வந்தவர். இன்றைய இளைஞர்களுக்கு கிரிக்கெட் விமர்சகராகவும், முன்னாள் வீரராக மட்டுமே தெரியும் சுனில் கவாஸ்கர் இன்றைய இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்கு மாபெரும் தூண் என்பது அவரது சாதனைகளை பார்த்தாலே புரியும்.