சீக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தானி ஆதரவாளர்கள், இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளனர். குறிப்பாக, காலிஸ்தானி அதரவாளர்கள் செய்யும் செயல் இந்திய அரசை உச்சக்கட்ட கோபத்தில் ஆழ்த்தி வருகிறது. அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள இந்திய தூதரகங்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காலிஸ்தானி பேரணிக்கு போட்டியாக நடத்தப்பட்ட இந்திய பேரணி:
அதேபோல, கனடாவில் சென்ற அணிவகுப்பு வாகனம் ஒன்றில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டது போன்று காட்சிப்படுத்தப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு ஆதரவாக கனட அரசு செயல்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
கனடாவில் ஒட்டப்பட்ட காலிஸ்தான் போஸ்டர்களில் இந்திய தூதர்களின் பெயரை குறிப்பிட்டு மிரட்டல் விடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம், இரு நாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என வெளி விவகாரங்கள் துறை அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் அறிவித்தப்படியே, இன்று டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள இந்திய தூதரகங்களை நோக்கி எதிர்ப்பு பேரணி நடத்தப்பட்டது. ஆனால், காலிஸ்தானி பேரணியை மிஞ்சும் அளவுக்கு மூவர்ண கொடியுடன் கூடிய இந்தியர்கள் போட்டி பேரணியை நடத்தியுள்ளனர்.
வந்தே மாதரம் முழக்கத்தால் அதிர்ந்து போன கனடா:
டொராண்டோவில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு வெளியே இன்று காலிஸ்தானி ஆதரவாளர்கள் சிலர் கூடினர். ஆனால், காலிஸ்தானி ஆதரவாளர்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் கூடிய கனடா வாழ் இந்தியர்கள், விண்ணை முட்டும் அளவுக்கு இந்திய ஆதரவு கோஷங்களை எழுப்பினர். "பாரத் மாதா கி ஜெய்", "வந்தே மாதரம்", இந்தியா வாழ்க" போன்ற கோஷங்களை காலிஸ்தானி ஆதரவாளர்களுக்கு எதிராக எழுப்பினர்.
முன்னதாக, இந்தியாவுக்கான கனட நாட்டு தூதரான கேமரன் மேக்கேவுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியிருந்தது. கனடாவில் அதிகரித்து வரும் காலிஸ்தான் ஆதரவு சக்திகளின் செயல்கள் குறித்து அவரிடம் கவலை தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், கனடா அரசு பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "பயங்கரவாதத்திற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக" விளக்கம் அளித்தார்.
காஸிஸ்தானி ஆதரவாளர்கள் மற்றும் தீவிரவாதிகளிடம் கனடா மென்மையாக நடந்து கொள்கிறது என்ற கருத்து நிலவி வருகிறதே என ட்ரூடோவிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், "அது தவறான செய்தி. கனடா எப்பொழுதும் வன்முறை மற்றும் வன்முறை அச்சுறுத்தல்களை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் எப்போதும் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளோம். எப்போதும் எடுப்போம். நாங்கள் மிகவும் பன்முக கலாசாரத்தை கொண்ட நாடு.
கருத்து சுதந்திரம் என்பது நாங்கள் மதிக்கும் ஒன்று. ஆனால், வன்முறை மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராகவும் அதன் அனைத்து வடிவங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதை நாங்கள் எப்போதும் உறுதி செய்வோம்" என்றார்.