இலங்கை வடமத்திய மாகாணத்தின் பொலன்னறுவையிலிருந்து கிழக்கு இலங்கையின் காத்தான்குடி (மட்டகளப்பு)நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பயணிகள் உயிரிழந்துள்ளதுடன் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


பேருந்து, மனாம்பிட்டியவில், மகாவலி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள, கொட்டாலிய பாலத்தில் சென்று கொண்டு இருக்கும் போது பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் மீது மோதி ஆற்றில் கவிழ்ந்ததாக, காவல்துறை ஊடகப் தொடர்பாளர் நிஹால் தல்துவா தெரிவித்ததாக, இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 


காயமடைந்தவர்கள் பொலன்னறுவையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சடலங்களும் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன என்று தல்துவா கூறியுள்ளார். 


விபத்து நள்ளிரவில் ஏற்பட்டதால் மீட்பு பணிகளை துவங்குவதில் தாமதம் ஆகியுள்ளது எனவும் அதேபோல், ஆற்றில் நீர் குறைவாக சென்றதால் உயிழப்பு எண்ணிக்கை 11 ஆக உள்ளது எனவும் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.