இந்திய கிரிக்கெட் இன்று உலகின் தலைசிறந்த அணியாக உருவெடுத்திருப்பதற்கு அதன் தொடக்க காலத்தில் பல வீரர்கள் இந்திய அணியை அடித்தளத்தை வலுவாக கட்டமைத்ததே காரணம் ஆகும். அவ்வாறு இந்திய அணியின் அஸ்திவாரத்தை மிக வலுவாக கட்டமைத்தவர்களில் ஒருவர் பிஷன்சிங் பேடி ஆவார்.


பிஷன்சிங் பேடி காலமானார்:


இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிஷன்சிங் பேடி இன்று காலமானார். அவருக்கு வயது 77 ஆகும். இந்தியா முதன் முதலில் 1975ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் வெற்றியை பெற்றது. அந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக பிஷன்சிங் பேடி ஆவார்.


பிஷன்சிங் பேடி 1946ம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி பிறந்தார். பஞ்சாபில் உள்ள அமிர்தசரசில் பிறந்த அவர், தன்னுடைய 15வது வயதில் வடக்கு பஞ்சாபிற்காக கிரிக்கெட் ஆடினார். தன்னுடைய இடது கை சுழற்பந்துவீச்சால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த பிஷன்சிங் பேடி, இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பை பெற்றார்.


சுழல் ஜாம்பவான்:


இந்திய அணியின் சுழல் ஜாம்பவான்களின் முன்னோடியாக பிஷன்சிங் பேடி திகழ்கிறார். இவர் இதுவரை இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 266 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் அவரது சிறந்த பந்துவீச்சாக ஒரே இன்னிங்சில் 98 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது அடங்கும். ஒரு போட்டியில் சிறந்த பந்துவீச்சாக 194 ரன்களை விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 10 ஒருநாள் போட்டிகளில் ஆடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


வலது கை பேட்ஸ்மேனான அவர் டெஸ்ட் போட்டிகளில் 656 ரன்களையும், ஒருநாள் போட்டியில் 31 ரன்களையும் எடுத்துள்ளார். இதுதவிர, முதல்தர கிரிக்கெட்டில் 1560 விக்கெட்டுகளையும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 71 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்திய அணியின் ஆரம்பகால சுழல் ஜாம்பவான்களான பிரசன்னா, பி.எஸ்.சந்திரசேகர், வெங்கட்ராகவன் மற்றும் பேடி ஆகியோர் இந்திய சுழல் சாம்ராஜ்யத்தை கட்டமைத்தவர்களாக கருதப்படுகிறார்கள்.


பத்மஸ்ரீ விருது:


1966ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியிலும், 1974ம் ஆண்டு ஜூலை 13-ந் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் களமிறங்கினார். 1979ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ந் தேதி தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், கடைசி ஒருநாள் போட்டியை அதே ஆண்டு ஜூன் 16-ந் தேதியும் ஆடியுள்ளார்.


பிஷன்சிங் பேடி மறைவுக்கு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு 1970ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த 2004ம் ஆண்டு வழங்கப்பட்டது.


மேலும் படிக்க: Pak Vs AFG Score LIVE: அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்தும் நூர் அகமது; சரிந்தது பாகிஸ்தானின் டாப் ஆர்டர்


மேலும் படிக்க: Asian Para Games 2022: பாரா ஆசிய விளையாட்டில் பதக்கம்: மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர், அமைச்சர் உதயநிதி வாழ்த்து!