உலகக் கோப்பை 2023-ன் 21வது ஆட்டத்தில் நேற்று இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியின்போது ரோஹித் சர்மா சிறப்பான சாதனையை படைத்தார். மேலும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடியின் பல வருட சாதனையையும் முறியடித்தார். 


அப்படி என்ன சாதனை..? 


ஒரு காலண்டர் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற பட்டியலில் ரோஹித் சர்மா மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார்.  ரோஹித் சர்மாவுக்கு முன், கிறிஸ் கெய்ல் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் மட்டுமே ஒரு காலண்டர் ஆண்டில் 50 சிக்ஸர்கள் என்ற சாதனையை எட்டியுள்ளனர். 


நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின்போது, ஓப்பனிங் செய்ய வந்த ரோஹித் சர்மா ஆரம்பம் முதலே அதிரடி காட்ட தொடங்கினார். இவர் 40 பந்துகளை எதிர்கொண்டு 46 ரன்களை எடுத்து தனது அரைசதத்தை மிஸ் செய்து அவுட்டானார். இந்த 46 ரன்களில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை விளாசினார். இந்த சிக்ஸர்களின் உதவியுடன் ரோஹித் சர்மா சாதனை படைத்தார். அதாவது ஒரு காலண்டர் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற அடிப்படையில் ரோஹித் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த ஆண்டில் ரோஹித் 51 சிக்சர்களை அடித்துள்ளார்.


ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனை தற்போது முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பெயரில் உள்ளது. அவர் 2015 ஆம் ஆண்டில் 58 ஒருநாள் சிக்சர்களை அடித்திருந்தார். இந்த பட்டியலில் கிறிஸ் கெய்ல் இரண்டாவது இடத்தில் உள்ளார். கெய்ல் 2019 ஆம் ஆண்டில் 56 சிக்ஸர்கள் அடித்திருந்தார். இந்த ஆண்டில் ரோஹித் 51 சிக்சர்களை அடித்துள்ளார். ஷாகித் அப்ரிடி கடந்த 2002ல் 48 சிக்சர்கள் அடித்திருந்தார். தற்போது அப்ரிடியை பின்னுக்கு தள்ளி ரோஹித் சர்மா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 


ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸின் சிக்ஸர்களின் சாதனையையும் ரோஹித் சர்மா முறியடித்தார். 


ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள்: 



  • கிறிஸ் கெய்ல் - 35 போட்டிகளில் 49 சிக்ஸர்கள்

  • ரோஹித் சர்மா - 23 போட்டிகளில் 40 சிக்ஸர்கள்

  • ஏபி டி வில்லியர்ஸ் -23 போட்டிகளில் 37 சிக்ஸர்கள்

  • ரிக்கி பாண்டிங் - 46 போட்டிகளில் 31 சிக்ஸர்கள்

  • பிரண்டன் மெக்கல்லம் - 34 போட்டிகளில் 29 சிக்ஸர்கள்


ரோஹித் சர்மாவின் மேலும் சில சாதனைகள்.. 



  • ஒருநாள் போட்டியில் முதல் 10 ஓவர்களில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ரோஹித் சர்மா 100 சிக்ஸர்களை பூர்த்தி செய்துள்ளார்.

  • ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா ஒரு உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களில் நான்காவது இடத்தை எட்டியுள்ளார். 2023 உலகக் கோப்பையில் கேப்டனாக ரோஹித் சர்மா இதுவரை 17 சிக்ஸர்களை அடித்துள்ளார். இந்த பட்டியலில் 2019 உலகக் கோப்பையில் 22 சிக்ஸர்களை அடித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் முதலிடத்தில் உள்ளார். இதே ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் 18 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

  • கேப்டனாக உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்களைப்  பட்டியலிலும் ரோஹித் சர்மா நான்காவது இடத்திற்கு வந்துள்ளார். 2023 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா இதுவரை 311 ரன்கள் எடுத்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி முதலிடத்தில் உள்ளார். சவுரவ் கங்குலி 2003 உலகக் கோப்பையில் 465 ரன்கள் எடுத்திருந்தார். கபில்தேவ் 1983 உலகக் கோப்பையில் கேப்டனாக 303 ரன்கள் எடுத்தார்.