நடந்து வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தடகள போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. இன்று நடந்த ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி63 போட்டியில் இந்திய வீரர் சைலேஷ் குமார் தங்கம் வென்றார். இவரை தொடர்ந்து, தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்றார். 


சைலேஷ் குமார் 1.82 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கதையும், மாரியப்பன் தங்கவேலு 1.80 மீட்டர் தாண்டி வெள்ளி பதக்கத்தையும், கோவிந்த்பாய் ராம்சிங்பாய் பதியார் 1.78 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி63 போட்டியில் இந்த மூன்று இந்திய விளையாட்டு வீரர்கள் மட்டுமே போட்டியாளர்களாக பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்தநிலையில், பாரா ஆசிய விளையாட்டு 2023ல் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு பாராட்டி வருகின்றனர். 


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து : 


#AsianParaGames2022 உயரம் தாண்டுதல் T63 பிரிவில் வெள்ளி 🥈வென்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் மீண்டுமொருமுறை பெருமை தேடித்தந்துள்ள நமது மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்!






உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்! 


விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: 






#AsianParaGames2022-ல் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நம் தமிழ்நாட்டு வீரர் தம்பி மாரியப்பன் தங்கவேலுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த பிரிவில், தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் இந்திய வீரர்கள் பெற்றுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. பதக்கம் வென்ற நம் வீரர்களுக்கு பாராட்டுகள்.


பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 : வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு  பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு பாராட்டு தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளின் உயரம் தாண்டும் ஆட்டத்தில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  இதற்காக அவருக்கு  எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், இனிவரும் ஆட்டங்களில் மேலும் சாதிக்கவும் வாழ்த்துகிறேன்.


இதே உயரம் தாண்டும்  போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய வீரர் சைலேஷ் குமார், வெண்கலம் வென்ற இந்திய வீரர் இராம்சிங் ஆகியோருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.