Asia Cup Final: ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் தற்போது பெரும் ஆவலுடன் எதிர்நோக்குவது இந்தியாவில் அடுத்த மாதம் அதாவது அக்டோபர் மாதம் 5ஆம் தேதி துவங்கவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்காத்தான். இதில் களமிறங்கும் 10 அணிகளில் நெதர்லாந்து அணியைத் தவிர மற்ற 9 அணிகளும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
ஆசிய கோப்பை பைனல்:
இதில் ஆசிய கோப்பை தொடரில் அடுத்த கட்ட முடிவுகளின் அடிப்படையில், ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகள் வெளியேறிவிட்டன. இதனால் நாளை அதாவது செப்டம்பர் 17ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கை அணிகள் கொழும்பில் உள்ள சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணி திடீரென தனது அணியில் மாற்றத்தைச் செய்துள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடிய அக்ஷர் படேலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.
அக்ஷர் பட்டேலுக்கு என்ன ஆச்சு?
தனக்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக பேட்டிங் செய்தது மட்டும் இல்லாமல் 9 ஓவர்கள் பந்து வீசி 47 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றியிருந்தார் அக்ஷர் பட்டேல். இதில் அவர் பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது அவருக்கு கையில் காயம் ஏற்படவே, அப்போதே அவருக்கு களத்தில் முதல் உதவி அளிக்கப்பட்டது.
கையில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் இந்திய அணியை வெற்றி பெறவைக்கவேண்டி சிறப்பாக விளையாடி வந்தார் அக்ஷர் பட்டேல். அதிலும் குறிப்பாக அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரது விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்த பின்னர், அக்ஷர் மட்டும் ஒற்றை நம்பிக்கையாக விளையாடி வந்தார். 49வது ஓவர் வரை களத்தில் இருந்த அக்ஷர் பட்டேல், 34 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் விளாசி 42 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை முஸ்தஃபிஸுர் ரகுமான் பந்தில் இழந்து வெளியேறினார்.
உலகக்கோப்பையில் எப்படி?
இந்நிலையில் அக்ஷருக்கு ஏற்பட்ட காயம் சரியாக கால அவகாசம் தேவை என்பதால், அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங் டன் சுந்தருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அக்ஷரின் காயம் விரைவில் குணமாகமல் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், வாஷிங்டன் சுந்தர் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
அதேபோல், அக்ஷர் பட்டேல் காயம் சரியாகவில்லை என்றால் சஹாலுக்கு இடம் கிடைக்கவும் அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்திய அணி ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.