ஐ.பி.எல். போட்டிகளைப் போலவே ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டு வரும் பிக்பாஷ் லீக் கிரிக்கெட் மிகவும் புகழ்பெற்ற டி20 கிரிக்கெட் தொடர் ஆகும். தற்கால கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் பந்தை கேட்ச் செய்வதற்காக செய்யும் சாகசங்கள் நம்மை மிரள வைக்குறது. ஆனால், பிக்பாஷ் லீக் கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரர் செய்த காரியம் இது அவுட்டா? இல்லையா..? என்ற சந்தேகத்தை ரசிகர்களுக்கு கிளப்பியுள்ளது.


புத்தாண்டின் முதல் தினமான நேற்று பிரிஸ்பேனில் கப்பா மைதானத்தில் பிரிஸ்பேன் ஹீட் – சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் முதலில் பிரிஸ்பேன் ஹீட் அணி பேட் செய்தது. அவர்கள் 5 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து, 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிட்னி அணி அதிரடியாகவே ஆடியது.




சிட்னி அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக ஆடினாலும் அடுத்தடுத்த வந்த வீரர்கள் ஆட்டமிழந்தனர். ஆனாலும், ஜோர்டன் சில்க் அபாரமாக ஆடி வந்தார். 18.1 ஓவர்களில் சிட்னி அணி 199 ரன்கள் எடுத்திருந்தபோது ஜோர்டன் சில்க் சிக்ஸருக்கு விளாசிய பந்தை மைக்கேல் நாசர் எல்லைக் கோட்டிற்கு உள்ளே சென்று தாவிக்குதித்து பந்தை தூக்கிப் போட்டு மீண்டும் தாவிக்குதித்து கேட்ச் பிடித்து மீண்டும் மைதானத்திற்குள் வந்தார். மிகுந்த சர்ச்சைக்குரிய இந்த கேட்ச்சிற்கு ஜோர்டன் சில்க்கிற்கு அவுட் வழங்கப்பட்டது.






தற்போது, இந்த அவுட் பெரும் விவாதத்தை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், என்ன விதிப்படி இந்த அவுட் வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான விடை கிடைத்துள்ளது. அதாவது, கிரிக்கெட் சட்ட விதி 19.5.2ன் படி, “ ஃபீல்டருக்கும் பந்திற்குமான முதல் தொடர்பிற்கு பிறகு மைதானத்திற்கும் பீல்டருக்கும் இடையே இறுதித்தொடர்பு இல்லாமல் இருக்கும்போது அவுட்டாக கருதப்படும்” என்று உள்ளது.


இதுதொடர்பாக, எம்.சி.சி. ட்விட்டரில் ” ஃபீல்டரின் முதல் தொடர்பு மைதானத்திற்கு உள்ளே இருந்தது. அவர் எல்லைக்கோட்டை கடந்து சென்றாலும் பந்து அவரிடம் இருந்த சமயம் அவர் மைதானத்தை தொடவில்லை.” என்று விளக்கம் அளித்துள்ளது. விதிகள் என்ன கூறினாலும் ரசிகர்கள் இந்த அவுட்டை ஏற்கவில்லை.


இந்த போட்டியின் இறுதியில் பிரிஸ்பேன் ஹீட் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக பிரிஸ்பேன் அணியின் ஜோஷ் பிரவுன் 62 ரன்களும், மெக்ஸ்வீனி 84 ரன்களும் விளாசினர். சர்ச்சைக்குரிய கேட்ச் பிடித்த மைக்கேல் நாசர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


மேலும் படிக்க: SIX Or OUT: சிக்ஸா..? அவுட்டா..? மைக்கேல் நேசரின் நம்பமுடியாத கேட்ச்.. இணையத்தில் பெரும் விவாதம்...!


மேலும் படிக்க: Pele's burial: உயிரோடு இருந்தும் பீலேவின் மரணத்தை அறியாத தாய்.. கால்பந்து பேரரசரின் உடல் நாளை நல்லடக்கம்..!