கால்பந்து பற்றி ஒரு அணு அளவு கூட தெரியாத நபர்களிடம் கால்பந்து பற்றி கேட்டால், அவர்கள் உச்சரிக்கும் வீரர்களில் மெஸ்ஸியும், ரொனால்டோவும் இருப்பர். இந்த இரு வீரர்கள் கால்பந்தை கடந்து உலகம் முழுவதும் அவ்வளவு புகழ் பெற்றவர்கள்.


இவர்கள் இருவருக்கும் முன்னதாகவே, தலைவனுக்கு தலைவனாக இருந்தவர்தான் பீலே. எல்லா காலத்திலும் கால்பந்து வீரர்களில் சிறந்த வீரராகவும், மூன்று முறை ஃபிபா உலகக் கோப்பை வென்ற ஒரே வீரராகவும் அறியப்பட்ட பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே கடந்த 29ம் தேதி இரவு காலமானர். அவருக்கு வயது 82. 


அவரது மறைவையொட்டி கடந்த மூன்று நாட்களாக பிரேசில் அரசாங்கம் துக்கம் அனுசரித்து வந்தது. பிரேசில் நாட்டின் சாவ் பாலோ மருத்துவமனையில் உள்ள பீலேவின் உடலானது இன்று காலை அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட இருக்கிறது. உள்ளூர் நேரப்படி இன்று காலை முதல் மறுநாள் காலை 10 மணி வரை பொது மக்கள் அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள். 


’கருத்து முத்து’ என்று அழைக்கப்படும் பீலேவின் அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும், அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியானது நாளைய தினம் அங்குள்ள தெருக்களின் வழியாக எடுத்து செல்லப்பட இருக்கிறது.  அதை தொடர்ந்து 4.4 ஏக்கர் நிலப்பரப்பில், 14 அடுக்கு மாடிகளை கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது. 


இங்குள்ள பெட்டகத்தில் பதப்படுத்தப்பட்ட அவரது உடல் வைக்கப்படும் என்றும், ஏறக்குறைய 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்டகங்கள் இங்கு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இது தான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மக்களின் பார்வைக்கு பிறகு, நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் நடக்கும் இறுதி சடங்கில் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது என்று பிரேசில் அரசாங்கம் தெரிவித்துள்ளது. கால்பந்து பேரரசர் பீலேவை வழியனுப்பி வைக்க இன்று லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பீலே மரணத்தை அறியாத அவரது தாய்:


கால்பந்து பேரரசர் பீலேவின் தாயார் 100 வயதான செலிஸ்டி அரன்டெஸ் தற்போது வரை உயிரோடு இருக்கிறார். பீலேவின் உடலை எடுத்து செல்லும் வழியில்தான் அவரது தாயார் வசித்து வருகிறார்.






பீலேவின் தாயார் செலஸ்டி, கடந்த மாதம்தான் தனது 100வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பீலே,” இன்று நாம் அனைவரும் எனது தாயாரின் 100 வது பிறந்தநாளை கொண்டாடுகிறோம். சிறு வயதிலிருந்தே அன்பு மற்றும் அமைதியின் மதிப்பை எனக்குக் கற்றுக் கொடுத்தாள். அவளுடைய மகனாக இருப்பதற்கு நன்றி சொல்ல எனக்கு நூற்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் உள்ளன. இந்த நாளைக் கொண்டாடும் வகையில் மிகுந்த உணர்ச்சியுடன் இந்தப் புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் உங்கள் பக்கத்தில் இருப்பதற்கு நன்றி அம்மா. ” என்று பதிவிட்டு இருந்தார்.