சமீபத்தில் இலங்கையில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணியை பாபர் வழிநடத்தி 3-0 என வென்றார். 28 வயதான அவர் மூன்று இன்னிங்ஸ்களில் 37.67 சராசரியுடன் 113 ரன்கள் எடுத்தார். முதல் போட்டியில் மூன்று பந்தில் ஆட்டமிழந்த அவர், அதைத் தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டியில் 66 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் அவர் 86 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். இதனால் அணியின் கவனிக்கத்தக்க வீரர்களில் முதல் இடத்தில் இவர் உள்ளார்.


பாகிஸ்தானின் துருப்பு சீட்டு


பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அணியின் முக்கியமான வீரராக பார்க்கப்பட்ட நிலையில், தொடரின் முதல் போட்டியிலேயே 150 ரன்களைக் கடந்து கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார். ஆசியக் கோப்பை போட்டிகளில் 150 ரன்களை கடந்த ஒரே வீரர் என்ற சாதனையை வைத்திருந்த கோலியுடன் பாபர் அசாம் இணைந்துள்ளார். இந்த தொடர் முழுவதும் அணிகளுக்கு சவாலாக இருப்பார் என்று இந்த சதம் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னும் ஓரளவு நல்ல எண்ணிக்கையை பதிவு செய்துள்ளார்.



ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டிகளில் பாபர் அசாம்


பாபர் ஆசியக் கோப்பையில் ODI வடிவத்தில் இதற்கு முன் ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அவை அனைத்தும் 2018 பதிப்பின் போது ஆடியது ஆகும். அதில் சுமாராக ஆடிய அவர், ஐந்து போட்டிகளில் 31.20 சராசரியில் 156 ரன்கள் எடுத்தார். அந்த மொத்த ரன்னையும் இந்த தொடரில் கிட்டத்தட்ட முதல் போட்டியிலேயே அடித்து விட்டார். அவர் ஹாங்காங்கிற்கு எதிரான முதல் போட்டியில், 36 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார், அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக 62 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 43.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், 29 ஓவர்களில் இந்திய அணி சேஸ் செய்து முடித்தது.


தொடர்புடைய செய்திகள்: City Of 1000 Tanks: சென்னையின் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணும் சூப்பர் திட்டம்.. அப்படி என்ன ஸ்பெஷல்?


இதற்கு முன் அதிகபட்ச ஸ்கோர்


ஆசியக் கோப்பையில் இதற்கு முன்னர், ODI வடிவத்தில் அவரது அதிகபட்ச ஸ்கோரை 2018 பதிப்பில் பாகிஸ்தானின் அடுத்த போட்டியில் பெற்றார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பொறுமையாக 94 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து அப்போதைக்கு அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்திருந்தார். அதன்பின் இப்போது தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். துபாயில் நடந்த சூப்பர் ஃபோர் மோதலில் இந்தியாவுக்கு எதிராக 25 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். பங்களாதேஷுக்கு எதிராக, அவர் 1 ரன்னில் முஸ்தாபிசுர் ரஹ்மானிடம் எல்பிடபிள்யூ முறையில் வீழ்ந்தார். அந்த போட்டியில் பாகிஸ்தான் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.



ஆசிய கோப்பை டி20 போட்டிகளில் பாபர் அசாம்


2022 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஆசிய கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தானுக்கு பாபர் கேப்டனாக இருந்தார். பாக்கிஸ்தான் இரண்டாம் இடத்தைப் பிடித்தாலும், பாபர் அசாமுக்கு அது மோசமான தொடராக அமைந்தது. அவர் 6 இன்னிங்ஸ்களில் 11.33 என்ற சராசரியில் 68 ரன்கள் மட்டுமே எடுத்தார். சூப்பர் ஃபோர் போட்டியில் இலங்கைக்கு எதிராக பாபர் அதிகபட்சமாக 30 ரன்களைப் பதிவு செய்தார். 2022 ஆசிய கோப்பையில் அவரது மற்ற ஸ்கோர்கள் 10, 9, 14, 0 மற்றும் 5 என்று மிக மோசமாக அமைந்தது.