ஐசிசி டிஜிட்டல் இன்சைடர் ஜைனப் அப்பாஸுடனான ஒரு நேர்காணலில், தொழில்முறை விளையாட்டு வீரர்களிடையே பரஸ்பர அனுதாபம் இருப்பதை பாபர் வெளிப்படுத்தியபோது, விராட் கோலி ஃபார்ம் இழந்து இருந்தபோது அவர் மீண்டு வர மிகவும் விரும்பியது குறித்து பேசியுள்ளார்.
ஃபார்மை தொலைத்து தவித்த கோலி
விராட் கோலி தனது ஃபார்மை தொலைத்து அதிலிருந்து மீண்டு வர என்னென்னவோ முயற்சிகள் எடுத்த நிலையில் உலகமே அவரை விமர்சித்து மேலும் இக்கட்டான நிலைக்கு கொண்டு சென்ற காலம் கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்களுக்கு முன்பு வரை இருந்தது. விராட் கோலிக்கு பாகிஸ்தானில் ரசிகர்கள் அதிகம், அதிலும் தீவிர ரசிகர் பாபர் அசாம்.
அந்த இக்கட்டான நேரத்தில்தான் பாபர் ஒரு ட்வீட் வெளியிட்டார். அவர்கள் இருவரும் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு "இதுவும் கடந்து போகும்", என்று பதிவிட்ட ட்வீட் பெரும் வைரலாகி இருந்தது. இதற்கு ஒரு நாள் முன்பு நடந்த போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க, அதில் கோலி வெறும் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்திருந்தார். மேலும் கேப்டன்சிக்களை எல்லா ஃபார்மட்டில் இருந்தும் இழந்து மோசமான நாட்களை கடந்து கொண்டிருந்தார்.
சதமடிக்காத மூன்று வருடம்
2019 நவம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக கோஹ்லி 136 ரன்கள் அடித்த பிறகு சர்வதேச சதம் எதுவுமே அடிக்கவில்லை. அவரது கடைசி சதத்திலிருந்து அந்த இங்கிலாந்துடனான ஒருநாள் போட்டி வரை, .மூன்று வருடங்கள் சேர்த்து கோஹ்லி 36.68 என்ற சராசரியில் 806 ஒருநாள் ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அந்த நேரத்தில் பல மாதங்கள் லாக்டவுனால் போட்டிகள் குறைவாக ஆடப்பட்டன என்பது இந்த எண்ணிக்கையை மிகக்குறைவாக காண்பித்தாலும், ஆடிய சில போட்டிகளிலும் சரியாக ஆடாதது கேள்விக்குள்ளானது.
அதே காலகட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறும் 27.25 சராசரி மட்டுமே அவர் வைத்திருந்தது இன்னும் மோசமாக பேசப்பட்டது.
வைரலான பாபரின் ட்வீட்
இப்படிப்பட்ட சூழலில், பொதுப்பார்வையில் பாகிஸ்தானின் கிரிக்கெட் எதிரியாக பேசப்படும் இந்தியாவுக்காக விளையாடும் கோலிக்கு பாபர் எப்படி ஆதரவளித்தார் என்று கேட்டபோது, ஒரு விளையாட்டு வீரராக ஒருவரின் கடினமான காலங்களில் மற்ற வீரர்கள் ஆதரிக்க வேண்டும் என்று பாபர் கூறினார்.
"ஒரு விளையாட்டு வீரராக, எல்லோருக்கும் அத்தகைய நேரம் வரும்," என்று பாபர் கூறினார், பிரபலமான பதிவான "இதுவும் கடந்து போகும்" ட்வீட் பதிவிட்டபோது அவரது மனநிலை எப்படி இருந்தது என்று கேட்கப்பட்டது. அதற்கு, “நான் ட்வீட் செய்தால் அது ஒருவருக்கு உதவியையும் நம்பிக்கையையும் தரக்கூடும் என்று அந்த நேரத்தில் நினைத்தேன். ஒரு வீரராக, கடினமான நேரத்தில் உள்ள எல்லா விளையாட்டு வீரரையும் ஆதரிக்க முயற்சிக்க வேண்டும்" என்று கூறினார்.
மீண்டு வந்த விராட் கோலி
மேலும் பேசிய அவர், "மற்றவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை நீங்கள் அவர்களது கடினமான காலங்களில்தான் அறிந்து கொள்ள முடியும். அந்த நேரத்தில், நான் அதைச் செய்திருக்க வேண்டும் என்று நினைத்தேன், ஒருவேளை அதிலிருந்து ஏதோ ஒரு ஸ்பார்க் அவருக்கு சாதகமானதாக இருக்கலாம். ஏதாவது ஒன்று ப்ளஸ் பாயிண்டாக மாறலாம் என்று நினைத்தேன்," என்றார். அவர் நினைத்தது போலவே அவரது டீவீட்டிற்கு பிறகு, விரைவில் கோலி ஃபார்மிற்கு திரும்பி தன்னை கோட் (GOAT - Greatest Of All Time) என்று மீண்டும் நிரூபித்தார். செப்டம்பர் 2022 இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், கோஹ்லி 122* ரன்கள் எடுத்தார். அந்த போட்டிக்கு பிறகு, அவர் மூன்று ODI சதங்களை அடித்துள்ளார். மேலும் மெல்போர்னில் ஒரு மறக்கமுடியாத டி20 போட்டியாக அந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய போட்டி மாறியது. இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் முக்கியமான பொறுப்பை ஏற்று 82* ரன்கள் எடுத்து உன்னதமான வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.