இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிப்ரவரி 17ம் தேதி தொடங்குகிறது. நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 132 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. அதன் தொடர்ச்சியாக, 2வது போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி டெல்லிக்கு சென்றது. இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டியானது நாளை காலை இந்திய நேரப்படி 9.30 மணிக்கு தொடங்குகிறது. 


இந்த போட்டிக்கு முன்னதாக, இந்திய அணி வீரர்களுக்கு டெல்லியில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டல்களில் தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் ஜி20 உச்சி மாநாடு மற்றும் திருமண சீசன் காரணமாக ஹோட்டல்கள் ஏற்கனவே புக் ஆகிவிட்டது. இதன் காரணமாக இந்திய அணி வீரர்களுக்கு எந்த ஹோட்டலும் கிடைக்கவில்லை. கடைசி நேரத்தில் வீரர்களை வேறு இடத்தில் தங்கவைக்க பிசிசிஐ திட்டமிட்டது. 


இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பொதுவாக டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் அல்லது ஐடிசி மோரியாவில் தங்கவைக்கப்படுவர். ஆனால், இந்த முறை நொய்டாவிற்கு அருகில் உள்ள ஹோட்டல் லீலாவில் அணி வீரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், நீண்ட நேர யோசனைகளுக்கு பிறகே, அத்தியாவசிய காரணங்களுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டது என தெரிவித்தார். 


வீட்டில் தங்கிய விராட் கோலி:


விராட் கோலி வழக்கம்போல் தங்கள் அணியுடன் ஹோட்டல் அறையில் தங்கவில்லை. கோலி தனது குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட குருகிராமில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார். இதற்கான அனுமதியையும் விராட் கோலி அணி மேலாளரிடம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணி டெல்லியில் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அதனால்தான் கோலி தனது குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவில் முடிவு செய்துள்ளார். மேலும், கோலி தனது குடும்பத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாங் டிரைவ் சென்ற புகைப்படமும் வைரலானது. 


டெஸ்ட் கிரிக்கெட்டில் பழைய ஃபார்மை மீண்டும் பெற விராட் கோலி கடுமையாக உழைத்து வரும் நிலையில், பயிற்சிக்காக ராகுல் டிராவிட்டை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. நாக்பூரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு பீல்டராக கோலி இரண்டு கேட்சுகளை தவறவிட்டார். இது கடும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் டிராவிட்டுடன் இணைந்து கோலி பீல்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இன்று விராட் கோலி இந்திய அணி வீரர்களுடன் ஹோட்டலுடன் இணைந்ததாக கூறப்படுகிறது. 


டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இந்திய அணி அசைக்க முடியாத கோட்டையாக உருவாக்கியுள்ளது. கடந்த 1987-க்குப் பிறகு டெல்லியில் இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியிலும் தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா டெல்லியில் 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அதில் 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய 6 போட்டிகளில் தோல்வியடைந்தது. அதுவும் 1987க்கு முன்பே. டெல்லியில் மொத்தம் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணி, 1959ம் ஆண்டுக்கு பிறகு இங்கு ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. 


இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஒட்டுமொத்த இந்திய அணி:


ரோஹித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி,ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்) இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி,முகமது சிராஜ், சூர்ய குமார் யாதவ் மற்றும் உமேஷ் யாதவ். 


இந்திய சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி:


பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்