விளையாட்டு போட்டிகளின்போதுது வீரர்கள் சில சமயம் நடுவர்களின் முடிவால் அதிருப்தி அடைவதும், அதற்கு தங்களது முகபாவனைகளால் அல்லது செயல்களால் அதிருப்தியை வெளிப்படுத்துவதும் அவ்வப்போது அரங்கேறுவது வழக்கம். சில சமயங்களில் சில வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நடுவர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள்.
அவுட் கொடுத்த அம்பயர்:
இந்த நிலையில், ஜாலி ரோவர்ஸ் சி.சி. மற்றும் யங்ஸ்டார்ஸ் கிரிக்கெட் கிளப் அணிகள் இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பிரபல வீரர் பாபா அபராஜித் அம்பயரிடம் வாக்குவாதம் செய்து களத்தை விட்டு வெளியேறமாட்டேன் என்று அடம்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
165 ரன்கள் என்ற இலக்குடன் பாபா அபராஜித் – சாய் சுதர்சன் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது, 34 ரன்களுடன் ஆடிக்கொண்டிருந்த பாபா அபராஜித் நிஷாந்த் வீசிய ஓவரை எதிர்கொண்டார். அந்த ஓவரில் அவர் அடித்த பந்து அவர் அருகில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த எதிரணி வீரர் அருகே சென்றது. அப்போது, ஃபீல்டர் ராஜூ அந்த பந்தை தாவி டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். அம்பயரும் அவுட் கொடுத்தார்.
அடம்பிடித்த அபராஜித்:
ஆனால், அபராஜித் இது அவுட்டா? பந்து பேட்டில் படவே இல்லை? என்பது போல சைகை காட்டினார். ஆனாலும், அம்பயர் மீண்டும் அவுட் என்றே தனது விரலை நீட்டி சைகை காட்டினார். ஆனால், அபராஜித்தோ அவுட் இல்லை என்பது போல மைதானத்திலே நின்றார். அவர் அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், லெக் அம்பயர் வந்து அவரை சமாதானப்படுத்தினார்.
ஆனால், பாபா அபராஜித்தோ அம்பயர்கள் இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் எதிரணி வீரர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பாபா அபராஜித்தின் செயலால் ஆட்டம் 5 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. மேலும், மைதானத்தில் பரபரப்பும் தொற்றிக் கொண்டது. பின்னர், அம்பயரின் முடிவை ஏற்றுக்கொண்ட அபராஜித் பெவிலியனுக்கு செல்லும் வரை அம்பயர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டும், அவர்களை திட்டிக்கொண்டும் சென்றார்.
அபராஜித்தின் இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அபராஜித்தை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், ரீப்ளேயில் அபராஜித்திற்கு பிடிக்கப்பட்ட கேட்ச் தரையில் பந்து பட்ட பிறகே பிடிக்கப்பட்டது போல ரீப்ளேயில் தெரிகிறது. இந்த போட்டியில் அபராஜித் ஆடிய ஜாலி ரோவர்ஸ் சி.சி. அணியே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 67 ரன்களை விளாசி அந்த அணியை வெற்றி பெற வைத்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அம்பயரின் முடிவால் அதிருப்தி அடைந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஸ்டம்பை பேட்டால் உடைத்த சம்பவம் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகிய நிலையில் தற்போது இந்த சம்பவமும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக களத்தில் வீரர்கள் நடுவர்களின் முடிவை ஏற்காமல் வாதத்தில் ஈடுபடுவது ஆரோக்கியமற்ற போக்கு என்று ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுனர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: First Gold medal for India: ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கம்..! 1928ல் நடந்த மேஜிக் என்ன?
மேலும் படிக்க:Jailer Review: ‘தியேட்டரில் தலைவரு அலப்பறை’ .. ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி? .. முதல் விமர்சனம் இதோ..!