பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிரடியாக ஆடிய விராட்கோலி 13 ஆயிரம் ரன்களை எட்டினார். 13 ஆயிரம் ரன்களை எட்டியது மட்டுமின்றி ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 47வது சதத்தையும் பூர்த்தி செய்தார். ஆசிய கோப்பைத் தொடரில் சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நேற்று மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், ரிசர்வ் டே-வான இன்று போட்டி நடைபெற்று வருகிறது.
சதம் விளாசிய விராட்கோலி:
147 ரன்களுடனவ் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்காக விராட்கோலி – கே.எல்.ராகுல் ஜோடி களமிறங்கியது. 25 ஓவர்கள் எஞ்சியிருந்ததாலும், மழை பெய்திருந்த காரணத்தாலும் மைதானம் எப்படி பேட்டிங்கிற்கு சாதகமாக அமையப்போகிறதா? பவுலிங்கிற்கு சாதகமாக அமையுமா? என்ற கேள்வி எழுந்தது.
தொடக்கத்தில் கே.எல்.ராகுல் – விராட்கோலி ஜோடி நிதானமாக ஆடியது. ஓரளவு களத்தில் நின்ற பிறகு கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடினார். கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடியதால், விராட்கோலி நிதானமாக ஆடினார். நிதானமாக ஆடிய விராட்கோலி அரைசதம் கடந்தார். அரைசதத்திற்கு பிறகு விராட்கோலி துரிதமாக ஆடத் தொடங்கினார்.
13 ஆயிரம் ரன்கள்:
அபாரமாக ஆடிய விராட்கோலி சரியான பந்துகளை பவுண்டரிகளுக்கு அனுப்பினார். தனது திறமையான ரன்னிங்கால் ஒன்று, இரண்டு ரன்களையும் அவர் சேகரித்தார். அவர் 99 ரன்களை எட்டியபோது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 13 ஆயிரம் ரன்களை எட்டினார். ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 13 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை விராட்கோலி படைத்தார்.
13 ஆயிரம் ரன்களை கடந்த அடுத்த பந்திலே விராட்கோலி சதம் அடித்தார். இதன்மூலம் ஒருநாள போட்டியில் விராட்கோலி தன்னுடைய 47வது சதத்தை விளாசினார். ஒரே ஒரு சதம் மூலம் விராட்கோலி சாதனை மேல் சாதனைகளை படைத்துள்ளார். அவர் 267 ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அவர் 321 இன்னிங்சில்தான் 13 ஆயிரம் ரன்களை எட்டினார். ரிக்கி பாண்டிங் 341 இன்னிங்சிலும், சங்ககரா 363 இன்னிங்சிலும், ஜெயசூர்யா 416 இன்னிங்சிலும் இந்த சாதனையை படைத்தனர்.
47வது சதம்:
மேலும், இந்த பிரேமதாசா மைதானத்தில் விராட்கோலி கடைசியாக ஆடிய 4 ஒருநாள் போட்டியிலும் சதம் விளாசியுள்ளார். சர்வதேச அரங்கில் நடப்பு கிரிக்கெட் உலகில் அதிக ரன்கள், அதிக சதத்துடன் ஆடும் வீரர் என்ற சாதனையும் விராட்கோலி வசமே உள்ளது. 34 வயதான விராட்கோலி இதுவரை 278 ஒருநாள் போட்டிகளில் ஆடி 267 இன்னிங்சில் பேட் செய்து 13 ஆயிரத்து 24 ரன்களை எடுத்துள்ளார். அவர் 47 சதங்கள், 65 அரைசதங்கள் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 183 ரன்களை எடுத்துள்ளார்.
ஒருநாள் போட்டியில் அதிக சதங்கள் விளாசியவர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் தன்வசம் வைத்துள்ளார். விராட்கோலி தற்போது 47 சதங்களுடன் இருப்பதால், ஆசிய கோப்பைத் தொடர், உலகக்கோப்பைத் தொடர் இருப்பதால் விராட்கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். விராட்கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிராக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IND vs PAK: ருத்ரதாண்டவம் ஆடிய இந்தியா.. கோலி, ராகுல் அபார சதம்.. 357 ரன்கள் பாகிஸ்தானுக்கு டார்கெட்..!
மேலும் படிக்க: Watch Video: 'யாருமே செய்யாத ஒன்னு..' ஷாஹீன் அப்ரிடி முதல் ஓவரிலே சிக்ஸர்.. அரிய சாதனையை படைத்த ரோஹித் சர்மா..!